உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / சிறைக்குள் ரவுடியை கொல்ல முயன்ற 12 பேருக்கு 7 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

சிறைக்குள் ரவுடியை கொல்ல முயன்ற 12 பேருக்கு 7 ஆண்டு சிறை புதுச்சேரி கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

புதுச்சேரி: ஏனாம் சிறைக்குள் புகுந்து மர்டர் மணிகண்டனை கொலை செய்ய முயன்ற 12 பேருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து புதுச்சேரி கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்டது.புதுச்சேரி ரவுடிகளான மர்டர் மணிகண்டன், கருணா, ஜெகன் தனித்தனி குழுக்களாக செயல்பட்டு வந்தனர். இந்த மூன்று ரவுடி கும்பலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறியது. இதனால், கடந்த 2012ம் ஆண்டு ரவுடி ஜெகன் காரைக்கால் சிறைக்கும், ரவுடிகள் மர்டர் மணிகண்டன், கருணா ஏனாம் சிறைக்கும் மாற்றப்பட்டனர்.இதில் கடந்த 2012ம் ஆண்டு வழக்கு விசாரணைக்கு போலீஸ் பாதுகாப்புடன் புதுச்சேரி வந்து காரைக்கால் சிறைக்கு திரும்பியபோது, ரவுடி ஜெகன் நோணாங்குப்பம் பாலத்தில் போலீஸ் வேனில் இருந்தபோது மர்ம நபர்களால் வெடிகுண்டு வீசி, கத்தியால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு பழிக்கு பழி தீர்க்க மர்டர் மணிகண்டனை கொலை செய்ய ஒரு கும்பல் திட்டமிட்டது.கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் 29ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு, 15 பேர் கொண்ட கும்பல், ஏனாம் சிறையின் 25 அடி உயர சிறை சுவரை கயிறு மற்றும் ஏணியை பயன்படுத்தி ஏறி உள்ளே குதித்து சென்றது.பெட்ரோல் கேன், கத்தி, ஆயுதங்களுடன் உள்ளே சென்ற கும்பல், சிறை வார்டன் சேகரை கயிற்றால் கட்டி, வாயில் டேப்பை ஒட்டியது. மர்டர் மணிகண்டன் சிறை அறையின் சாவியை தேடினர். அதற்குள் மற்றொரு வார்டன் செல்வம் கவனித்து விசில் அடித்ததுடன், ஏனாம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனால் கொலை முயற்சியை கைவிட்டு அந்த கும்பல் சிறையில் இருந்து தப்பித்து ஓடியது. சப்இன்ஸ்பெக்டர்கள் சண்முகம், சந்தோஷ் தலைமையிலான குழுவினர், வயல்வெளி வழியாக தப்பி ஓடிய 13 பேரை கைது செய்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி மேலும் 5 பேர் இவ்வழக்கில் சேர்க்கப்பட்டனர். இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் ராஜி ஆஜரானார். வழக்கு விசாரணைக்கு சாட்சிகளை ஆஜர்படுத் துதல் மற்றும் ஆவணங்கள் தாக்கல் செய்யும் பணிகளை ஏனாம் எஸ்.பி., ரகுநாயகம் ஒருங் கிணைத்தார்.வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட காட்டுக்குப்பம் மணிபாலன்,26; பிள்ளையார்குப்பம் அமுதன், 25; குண்டுப்பாளையம் திவாகர்,23; ஜெ.ஜெ.நகர் பிரகாஷ்,23; உழவர்கரை ஜெகன்சூசைராஜ்,24; வம்பாக்கீரப்பாளையம் விஜயக்குமார் (எ) டக்லஸ்,25; அரியாங்குப்பம், சண்முகா நகர் பாஸ்கர்,23; அரியாங்குப்பம் மாஞ்சாலை வைத்தியநாதன் (எ) விவேக்,23; சுடலை வீதி வெங்கடேசன், 27; காரைக்கால் சிவா, 25; நாகூர் பாக்கியராஜ், 28; நாகப்பட்டினம் பிரகாஷ், 26, ஆகிய 12 பேர் மீது குற்றம் நிருபிக்கப்பட்டது. 12 பேருக்கும் தலா 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, தலா ரூ. 6,500 அபராதம் விதித்து நீதிபதி மோகன் உத்தரவிட்டார்.வழக்கு விசாரணையின்போது, சதிஷ் சிலம்பரன், விஜயக்குமார் இறந்து விட்டனர். ரவுடி கருணா, அஷ்வின், வெள்ள சங்கர், பல்லா சுரேஷ் ஆகியோர் மீதான குற்றச்சாட்டு நிருபிக்கப்படாததால் விடுதலை செய்யப்பட்டனர்.தண்டனை பெற்ற 12 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

தப்பியோடிய கைதி

சிறை தண்டனை பெற்ற திவாகர், கோர்ட் வளாகத்தில் இருந்த திடீரென மாயமானதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பதற்றம் அடைந்தனர்.பின்னர் கோர்ட்டில் இருந்த திவாகரின் நண்பர் மூலம் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, திவாகர் வெளியூர் தப்பிச் செல்ல பஸ் நிலையத்தில் காத்திருப்பது தெரியவந்தது.உடன் சிறப்பு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்று, திவாகரை பிடித்து கோர்ட்டிற்கு அழைத்து வந்தனர். அதன்பிறகே போலீசார் நிம்மதி அடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி