| ADDED : ஜன 31, 2024 02:25 AM
புதுச்சேரி : புதுச்சேரியில் கொரோனா தாக்குதலில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.இந்தியாவில் கொரோனா தாக்குதலில், பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 2 ஆயிரம் மருத்துவர்கள் உயிரிழந்தனர். அதிகபட்சமாக, பீஹாரில் 155 மருத்துவர்கள் இறந்தனர். தமிழகத்தில் - 150, புதுச்சேரியில் - 5 மருத்துவர்கள் உயிரிழந்தனர்.இந்நிலையில், கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி, 30ம் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி, புதுச்சேரியில் உயிரிழந்த மருத்துவர்களுக்கு, இந்திய மருத்துவ சங்கம், புதுச்சேரி கிளைசார்பில், வைசியாள் வீதியில் உள்ள, ஜோதி கண் மருத்துவமனையில், நேற்று மாலை அஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடந்தது.சங்கத் தலைவர் சுதாகர், பொதுச்செயலாளர் சீனிவாசன் மற்றும் டாக்டர் வனஜா வைத்தியநாதன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்கள், உயிரிழந்த மருத்துவர்களின் உறவினர்கள் பங்ேகற்று மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.