புதுச்சேரி : புதுச்சேரியில் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நடக்கும் போராட்டத்தால், இன்று பஸ், ஆட்டோக்கள் ஓடாது, என தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத போக்கை கண்டித்து அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், நாடு தழுவிய போராட்டம் இன்று நடக்கிறது. இதனையொட்டி நேற்று அனைத்து தொழிற்சங்கத் தலைவர்கள், விவசாய சங்கங்களின் நிர்வாகிகள், பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் முதலியார்பேட்டையில் உள்ள ஏ.ஐ.டி.யு.சி., அலுவலகத்தில், நடந்தது.இதில், ஏ.ஐ.டி.யு.சி பொருளாளர் அந்தோணி, சி.ஐ.டி.யு தலைவர் பிரபுராஜ், செயலாளர் சீனிவாசன், ஐ.என்.டி.யு.சி பொது செயலாளர் ஞானசேகரன், துணைத்தலைவர் சொக்கலிங்கம், ஏ.ஐ.சி.சி.டி.யு., பொதுச்செயலாளர் புருேஷாத்தமன், துணைத்தலைவர் விஜயா,விவசாய சங்க தலைவர் கீதநாதன், பொதுச்செயலாளர் ரவி உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இது குறித்து ஏ.ஐ.டி.யு.சி பொதுச்செயலாளர் சேது செல்வம் கூறியதாவது:புதுச்சேரி நகர பகுதியில் அனைத்து தொழிற்சங்கங்கள் இன்று நடத்தும் வேலை நிறுத்த போராட்டத்தால், காலை 10:00 மணி முதல், மதியம் 1:00 மணி வரை, பஸ், ஆட்டோ, டெம்போ, லாரி, வேன் உள்ளிட்டவை இயங்காது. கிராமப்புறங்களில், பாகூர், மதகடிப்பட்டில் மறியல் போராட்டமும், கடையடைப்பும் நடக்கும். நகர பகுதியில் சுப்பையா சிலையில் இருந்து பேரணியாக சென்று பாஸ்போர்ட் ஆபீஸ் முற்றுகையிட்டு மறியல் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.