பெங்களூரு: டபிள்யு.பி.எல்., தொடரின் இரண்டாவது சீசன் இன்று (பிப். 23) துவங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, டில்லி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.இந்தியாவில் பெண்களுக்கான பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) தொடர் நடக்கிறது. டில்லி, குஜராத், மும்பை, பெங்களூரு, உ.பி., என ஐந்து அணிகள் மோதுகின்றன. இரண்டாவது சீசன் பெங்களூரு, டில்லியில் நடக்கவுள்ளது. முதற்கட்ட போட்டிகள் பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடக்கும்.மும்பையில் நடந்த முதல் சீசனில் மெக் லானிங் (345, ஆஸி.,) அதிக ரன், ஹேலே மாத்யூஸ் (16, வெ. இண்டீஸ்) அதிக விக்கெட் சாய்த்தனர். இம்முறை இளம் இந்திய வீராங்கனைகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவர் என நம்பலாம். கடந்த 10 மாதங்களாக சர்வதேச அரங்கில் அசத்தும் ஸ்ரேயான்கா 22, (பெங்களூரு), சுழலில் மட்டுமன்றி, பின் வரிசை பேட்டிங்கிலும் கைகொடுக்கிறார்.டில்லி வீராங்கனை திதாஸ் சாது 19, முதல் சீசனில் ஒரு போட்டியில் கூட சேர்க்கப்படவில்லை.ஆனால் ஆசிய விளையாட்டில் அறிமும் ஆனார். மும்பையில் நடந்த 'டி-20' போட்டியில் 4 விக்கெட் சாய்த்த சாது, ஆஸ்திரேலியாவை வீழ்த்த கைகொடுத்தார். கேரளாவின் மின்னு மணியும் சர்வதேச அரங்கில் கலக்கி வருகிறார். இவர்கள் டில்லி அணிக்காக மீண்டும் மிரட்ட காத்திருக்கின்றனர்.தவிர ஸ்மிருதி மந்தனா (பெங்களூரு), அலிசா, தீப்தி (உ.பி.,), ஜெமிமா (டில்லி) உள்ளிட்டோர் மீதும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இன்று நடக்கும் போட்டியில் நடப்பு சாம்பியன், ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி, மெக் லானிங்கின் டில்லியை எதிர்கொள்கிறது.பைனல் எப்படிஐந்து அணிகள் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோதும். 20 போட்டி முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இடம் பெறும் அணி, நேரடியாக பைனலுக்கு முன்னேறும்.* 2, 3 வது இடம் பெறும் அணிகள் 'பிளே ஆப்' போட்டியில் மோதும். இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லும். டில்லியில் மார்ச் 15ல் பைனல் நடக்கவுள்ளது.