| ADDED : பிப் 12, 2024 09:43 PM
நைரோபி: கென்ய தடகள வீரர் கெல்வின் கிப்டம் கார் விபத்தில் மரணமடைந்தார்.கென்ய மாரத்தான் வீரர் கெல்வின் கிப்டம் 24. கடந்த ஆண்டு லண்டன், சிகாகோ மாரத்தான் ஓட்டத்தில் தங்கம் வென்றார். இதில் சிகாகோ மாரத்தானில் பந்தய துாரத்தை 2 மணி நேரம், 00.35 வினாடியில் கடந்து புதிய உலக சாதனை படைத்தார். இதன்மூலம் மாரத்தான் போட்டிக்கான உலக தரவரிசையில் 'நம்பர்-1' இடத்தை கைப்பற்றினார். இந்த ஆண்டு நடக்கவுள்ள பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.நேற்று முன்தினம் கெல்வின் கிப்டம், அவரது பயிற்சியாளர் கெர்வைஸ் ஹகிசிமனா (ருவாண்டா), 24 வயது இளம் பெண் ஒருவர் என மூவரும் காரில் சென்றனர். கிப்டம் காரை ஓட்டிச் சென்றார். இரவு 11:00 மணியளவில் மேற்கு கென்யாவின் கப்சபெட் பகுதியில் சென்று கொண்டிருந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் இருந்த மரத்தில் மோதி, பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் கிப்டம், ஹகிசிமனா சம்பவ இடத்தில் மரணமடைந்தனர். பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய இளம் பெண்னை போலீசார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.கிப்டம் மறைவுக்கு, கென்ய தடகள நட்சத்திரங்கள், கென்ய அதிபர் வில்லியம் ரூட்டோ, உலக தடகள தலைவர் செபாஸ்டியன் கோ உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.