உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / கேலோ இந்தியா: கீர்த்தனா தேசிய சாதனை * பளுதூக்குதலில் அசத்தல்

கேலோ இந்தியா: கீர்த்தனா தேசிய சாதனை * பளுதூக்குதலில் அசத்தல்

சென்னை: கேலோ இந்தியா விளையாட்டு பளுதுாக்குதலில் தமிழகத்தின் கீர்த்தனா, யூத் பிரிவில் தேசிய சாதனை படைத்தார். தமிழகம் நேற்று ஒரே நாளில் 6 தங்கம் உட்பட 9 பதக்கம் கைப்பற்றியது. கேலோ இந்தியா யூத் விளையாட்டின் 6வது சீசன் சென்னை, கோவை, திருச்சி, மதுரையில் நடக்கிறது. சென்னையில் பளுதுாக்குதல் போட்டி நடந்தது. தமிழக வீராங்கனை கீர்த்தனா, 81 கிலோ பிரிவில் களமிறங்கினார். ஸ்னாட்ச் பிரிவில் 85 கிலோ துாக்கி, புதிய சாதனை படைத்தார். அடுத்து கிளீன் அண்டு ஜெர்க் பிரிவில் 103 கிலோ துாக்கினார். ஒட்டுமொத்தமாக 188 கிலோ துக்கிய கீர்த்தனா, யூத் பிரிவில் புதிய தேசிய சாதனை படைத்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதற்கு முன் ஆந்திராவின் ஸ்ரீலட்சுமி 185 கிலோ (81+104) துாக்கியதே சாதனையாக இருந்தது. தமிழகத்தின் மற்றொரு வீராங்கனை ஓவியா, 184 கிலோ துாக்கி, வெள்ளிப்பதக்கம் பெற்றார்.

பாட்மின்டனில் தங்கம்

ஆண்கள் பாட்மின்டன் இரட்டையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் வினாயக்ராம், ஸ்வஸ்திக் ஜோடி, டில்லி அணியை சந்தித்தது. முதல் செட்டை 21-18 என கைப்பற்றிய தமிழக ஜோடி, அடுத்த செட்டையும் 21-18 என வசப்படுத்தியது. முடிவில் தமிழக ஜோடி 21-18, 21-18 என்ற கணக்கில் வெற்றிபெற்று, தங்கப்பதக்கம் வென்றது. தமிழகத்தின் மிதேஷ், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார்.

டென்னிசில் அசத்தல்

பெண்கள் டென்னிஸ் இரட்டையர் பிரிவு பைனலில் தமிழகத்தின் மாயா ராஜேஸ்வரி, லட்சுமி பிரபா ஜோடி, கர்நாடகாவின் சுஷிதா, ஸ்ரீனிதி ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 6-2, 6-1 என எளிதாக வென்று தங்கம் தட்டிச் சென்றது. ஆண்கள் இரட்டையரில் தமிழகத்தின் ரெத்தின் பிரனவ், கந்தவேல் மகாலிங்கம் தங்கப்பதக்கம் வென்றனர். ஆதித்தி அபாரம்உலக சாம்பியன், ஆசிய விளையாட்டில் வெண்கலம் வென்ற மகாராஷ்டிராவின் ஆதித்தி, வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் தனிநபர், அணிகளுக்கான போட்டியில் தங்கம் கைப்பற்றினார். ஆண்கள் ஒற்றையரில் தமிழகத்தின் மித்தேஷ் வெண்கலம் வென்றார்.

கோ கோ: மகாராஷ்டிரா அபாரம்

கோ கோ போட்டி மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்தது. பெண்கள் பிரிவு பைனலில் மகாராஷ்டிரா அணி 33-24 என்ற புள்ள கணக்கில் ஒடிசா அணியை வீழ்த்தி, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. மகாராஷ்டிரா ஆண்கள் அணி, பைனலில் 40-30 என டில்லி அணியை சாய்த்து, தங்கம் தட்டிச் சென்றது.

மணிப்பூர் சாம்பியன்

கோவை பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரியில் 'தாங் டா' போட்டி நடந்தது. 18 வயதுக்குட்பட்ட ஆண்கள், பெண்களுக்கு 'புனபா ஆமா', புனபா அனிஷூபா என இரு வகை போட்டிகள் நடந்தன. இதில் அதிக பதக்கங்களை (2 தங்கம், 4 வெள்ளி, 1 வெண்கலம்) வென்று மணிப்பூர் மாநிலம் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. புனபா ஆமா போட்டியில் தமிழக வீரர்கள் ஹேமந்த் (56 கிலோ), கிறிஸ் ரோஷன் (60கிலோ) நான்காம் இடம் பிடித்தனர்.

மூன்றாவது இடம்

கேலோ இந்தியா விளையாட்டில் 35 தங்கம் உட்பட 91 பதக்கம் வென்ற தமிழகம், பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.'டாப்-5' அணிகள்அணி தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்மகாராஷ்டிரா 53 46 50 149ஹரியானா 35 22 46 103தமிழகம் 35 20 36 91டில்லி 10 15 19 44ராஜஸ்தான் 10 15 14 39

இன்று நிறைவு விழா

கேலோ இந்தியா விளையாட்டில் இன்றைய கடைசி நாளில் கால்பந்து, டேபிள் டென்னிஸ், டென்னிஸ், நீச்சில் போட்டிகள் சென்னையில் நடக்கின்றன. மாலையில் நிறைவு விழா நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி