உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஒலிம்பிக் வாய்ப்பு... திராஜ் எதிர்பார்ப்பு

ஒலிம்பிக் வாய்ப்பு... திராஜ் எதிர்பார்ப்பு

புதுடில்லி: ''பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு இந்திய 'ரீகர்வ்' அணி தகுதி பெற விரும்புகிறேன்,'' என, இந்திய வீரர் திராஜ் தெரிவித்துள்ளார்.பாரிஸ் ஒலிம்பிக் வில்வித்தை போட்டிக்கு இந்தியா சார்பில் திராஜ் 22, (தனிநபர் 'ரீகர்வ்') மட்டும் தகுதி பெற்றுள்ளார். இவர், கடந்த ஆண்டு பாங்காக்கில் நடந்த ஆசிய தகுதிச் சுற்றில் வெள்ளி வென்றதன்மூலம் இந்த வாய்ப்பை பெற்றார்.சமீபத்தில் சீனாவின் ஷாங்காங் நகரில் நடந்த உலக கோப்பையில் திராஜ், தருண்தீப் ராய், பிரவின் ஜாதவ் அடங்கிய இந்திய அணி, 'ரீகர்வ்' பிரிவு பைனலில் 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' தென் கொரியாவை வீழ்த்தியது. இதன்மூலம் 14 ஆண்டுகளுக்கு பின் உலக கோப்பையில் இந்தியாவுக்கு 'ரீகர்வ்' அணிகள் பிரிவில் தங்கப்பதக்கத்தை பெற்றுத்தந்தது.துருக்கியில் வரும் ஜூன் மாதம் நடக்கவுள்ள உலக கோப்பையில் இந்திய 'ரீகர்வ்' அணி சிறப்பாக செயல்படும் பட்சத்தில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறலாம். ஒருவேளை இதில் சோபிக்காவிட்டால் தரவரிசை அடிப்படையில் வாய்ப்பு பெறலாம்.இதுகுறித்து திராஜ் கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதே இந்திய 'ரீகர்வ்' அணியினரின் முதல் இலக்கு. இதற்காக துருக்கியில் நடக்கவுள்ள உலக கோப்பையில் முழுத்திறமையை வெளிப்படுத்துவோம். இப்போட்டிக்காக முழுவீச்சில் தயாராகி வருகிறோம். சமீபத்தில் முடிந்த உலக கோப்பை பைனலில் 'நடப்பு ஒலிம்பிக் சாம்பியன்' தென் கொரியாவை வீழ்த்தி தங்கம் வென்றது ஊக்கமாக அமையும். உலக கோப்பை, உலக சாம்பியன்ஷிப் போட்டியில் சாதிக்கும் இந்திய வில்வித்தை நட்சத்திரங்கள் ஒலிம்பிக்கிலும் பதக்கம் வென்று தர வேண்டும். இம்முறை ஒலிம்பிக் வில்வித்தையில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் கிடைக்கும் என நம்புகிறேன்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி