| ADDED : மார் 20, 2024 10:58 PM
பெங்களூரு: இந்தியன் ஓபன் 'ஜம்ப்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா தங்கப் பதக்கம் கைப்பற்றினார்.இந்திய ஓபன் 'ஜம்ப்' மூன்றாவது சீசன் பெங்களூருவில் நடந்தது. பெண்களுக்கான 'போல் வால்ட்' போட்டியில் தமிழகத்தின் பவித்ரா வெங்கடேஷ், 4.15 மீ., உயரம் தாண்டி முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் கைப்பற்றினார். தேசிய சாதனையை (ராய் மீனா, 4.21 மீ.,) முறியடிக்கும் வகையில் பவித்ரா, 4.22 மீ., உயரத்தை மூன்று முறை தாண்டிய போதும், 'பவுல்' ஆனதால் ஏமாற்றம் அடைந்தார்.கேரளாவின் மரியா ஜெய்சன், 3.80 மீ., உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் வென்றார். கர்நாடகாவின் சிந்துஸ்ரீ வெண்கலம் கைப்பற்றினார்.பெண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டியில் கேரளாவின் ஆதிரா, 1.76 மீ., தாண்டி தங்கம் வென்றார். தமிழகத்தின் கெவினா (1.74 மீ.,), ஹரியானாவின் குஷாலி (1.68 மீ.,) வெள்ளி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினர்.பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் கேரளாவின் நயனா ஜேம்ஸ், 6.67 மீ., துாரம் தாண்டி தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உள்ளூர் வீராங்கனை ஷைலி சிங், 6.40 மீ., துாரம் மட்டும் தாண்ட, வெள்ளிப்பதக்கம் தான் கிடைத்தது. ராஜஸ்தானின் சுஷ்மிதா சென் (6.28 மீ.,) வெண்கலம் வென்றார்.