| ADDED : ஜூன் 18, 2024 11:14 PM
புதுடில்லி: பாரிஸ் ஒலிம்பிக் துப்பாக்கிசுடுதல் இந்திய அணியில் தமிழகத்தின் பிரித்விராஜ் தொண்டைமான் சேர்க்கப்பட்டார்.பிரான்சின் பாரிசில் ஒலிம்பிக் போட்டி ஜூலை 26-ஆக. 11ல் நடக்கவுள்ளது. இதற்கான துப்பாக்கிசுடுதல் போட்டிக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் வழங்கப்படும். மல்யுத்தம், டென்னிஸ் போல, தனித் தனியாக தகுதி பெற முடியாது. இதன் அடிப்படையில் பல்வேறு கட்ட தகுதிச்சுற்றின் செயல்பாடு அடிப்படையில், இந்தியாவில் இருந்து இம்முறை அதிகபட்சம் 20 நட்சத்திரங்கள் பங்கேற்க உள்ளனர். இதற்கு முன் ரியோவில் (2016) 12, டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) 15 பேர் தான் அதிகபட்சமாக பங்கேற்றனர்.இதற்கான முதற்கட்ட இந்திய அணியில் 8 'ரைபிள்', 7 'பிஸ்டல்' என மொத்தம் 15 பேர் இடம் பெற்றனர். தற்போது இரண்டாவது கட்டமாக 'சீனியர்' வீரர் பிரித்விராஜ் தொண்டைமான் தலைமையிலான 'ஷாட் கன்' பிரிவு அணி அறிவிக்கப்பட்டது.தமிழகத்தை சேர்ந்த இவர், ஆண்கள் 'டிராப்' பிரிவு போட்டியில் பங்கேற்க உள்ளார். 2023ல் ஹாங்சு ஆசிய விளையாட்டில் 'டிராப்' அணிகளுக்கான போட்டியில் தங்கம் வென்ற அணியில் பிரித்விராஜ் தொண்டைமான் இடம் பெற்றிருந்தார். சமீபத்தில் இத்தாலியில் நடந்த உலக கோப்பை ('ஷாட் கன்') தொடரில் இவர், வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார்.பெண்களுக்கான 'டிராப்' பிரிவில் ராஜேஸ்வரி குமாரி, ஆண்கள் 'ஸ்கீட்' பிரிவில் அனன்ஜீத் சிங் இடம் பிடித்தனர். பெண்களுக்கான 'ஸ்கீட்' பிரிவில் ரெய்சா தில்லான், மகேஷ்வரி சவுகான் என இருவர் களமிறங்குகின்றனர். இந்த ஐந்து பேரும் முதன் முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளனர்.