உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / ஒலிம்பிக்கில் அமன் ஷெராவத்

ஒலிம்பிக்கில் அமன் ஷெராவத்

இஸ்தான்புல்: பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றார் மல்யுத்த வீரர் அமன் ஷெராவத். துருக்கியில் உலக மல்யுத்தம் ஒலிம்பிக் தகுதி போட்டி நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 57 கிலோ பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத், காலிறுதியில் உக்ரைனின் ஆன்ட்ரியை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் 2023 ஆசிய விளையாட்டில் வெள்ளி வென்ற வட கொரியாவின் சோங்சங் ஹானை சந்தித்தார். துவக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அமன், முடிவில் 12-2 என வெற்றி பெற்று, பைனலுக்கு முன்னேறினார். இதையடுத்து பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றார். 65 கிலோ போட்டியில் இந்திய வீரர் சுஜீத், முதல் இரு போட்டியில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார். பின் கனடாவின் மவுரிசை 10-0 என சாய்த்து அரையிறுதிக்கு தகுதி பெற்றார். இதில் சுஜீத், மங்கோலியாவின் துல்கா ஆசிரிடம் 1-6 என தோற்றார். 86 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் தீபக் புனியா, முதல் சுற்றில் சீன வீரர் ஜுஷென் லின்னை சந்தித்தார். இதற்கு முன் மோதிய இரு போட்டியிலும் லின்னை வீழ்த்திய தீபக் புனியா, துவக்கத்தில் 3-0 என முந்தினார். கடைசி நேரத்தில் 4-6 என தோற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலத்தை இழந்த இவர், இம்முறை பாரிஸ் ஒலிம்பிக் தகுதி பெறும் வாய்ப்பை கோட்டை விட்டார்.74 கிலோ போட்டியில் இந்தியாவின் ஜெய்தீப், முதல் இரு போட்டியில் வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். இதில் செக் குடியரசின் தைமுராசிடம் தோல்வியடைந்தார். மற்ற போட்டிகளில் இந்திய வீரர்கள் தீபக் (97 கிலோ), சுமித் (125 கிலோ) முதல் சுற்றில் தோல்வியடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை