சென்னை,:சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம், 118 கி.மீ., துாரத்தில், மாதவரம் - சிறுசேரி; பூந்தமல்லி - சோழிங்கநல்லுார் மற்றும் பூந்தமல்லி - கலங்கரை விளக்கம் என, மூன்று வழித்தடங்களில் அமைகிறது. மொத்தம், 128ல் 84 நிலையங்கள் சுரங்கத்தில் அமைகின்றன.இதில், மாதவரம் - சிறுசேரி பாதையில், ஓ.எம்.ஆரில் 20 கி.மீ., துாரம் மேம்பாலம் அமைக்கப்படுகிறது.மாதவரம் - சிறுசேரி மற்றும் பூந்தமல்லி - சோழிங்கநல்லுார் ஆகிய வழித்தடங்கள், சோழிங்கநல்லுாரில் சந்திக்கின்றன.முக்கிய சந்திப்பாக சோழிங்கநல்லுார் உள்ளதால், நடைபாதை, சாலை மற்றும் இரண்டு ரயில் நிலையங்கள் என, 100 அடி உயரத்தில் நான்கு அடுக்குகளில், இப்பாலம் அமைக்கப்படுகிறது.முதல் அடுக்கு நடைபாதை, 2ம் அடுக்கு ரவுண்டானா மேம்பாலம்,3ம் அடுக்கு பூந்தமல்லி -- சோழிங்கநல்லுார் நிலையம், 4ம் அடுக்கு மாதவரம்- சிறுசேரி நிலையம் அமைகிறது. இதற்காக, அந்த சந்திப்பில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது.இதேபோல், துரைப்பாக்கம் சந்திப்பிலும், நான்கு அடுக்கு கட்டமைப்புடன் நிலையங்கள், சாலை, நடைபாதை அமைக்கப்பட உள்ளது.இந்நிலையில், இப்பணி மேற்கொள்வது குறித்து சோழிங்கநல்லுார் சந்திப்பில் நேற்று, மெட்ரோ ரயில் நிறுவன மேலாண்மை இயக்குனர் சித்திக், திட்ட இயக்குனர் அர்ஜுனன் உள்ளிட்ட அதிகாரிகள் களஆய்வு செய்தனர்.அப்போது, நிலையங்கள், சாலை, நடைபாதை அமையும் இடம், இதற்காக நிலம் கையகப் படுத்த வேண்டியவை, போக்குவரத்து மாற்றம் குறித்து, மெட்ரோ ரயில் மற்றும் பொதுத்துறை நிறுவனமான எல்அண்ட் டி., அதிகாரிகளுடன், ஆலோசனைநடத்தினார்.நெம்மேலி கடல்நீர் குடிநீராக்கும் நிலையத்தில் இருந்து, இரண்டு பெரிய குழாய்கள் மற்றும் ஒரு கழிவுநீர் குழாய், சோழிங்கநல்லுார் சந்திப்பை கடந்து செல்கிறது.இந்த குழாய்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் துாண்கள் அமைக்க உள்ளதாக, மெட்ரோ ரயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரவுண்டானா மேம்பாலம்
துரைப்பாக்கம், சோழிங்கநல்லுார் சந்திப்பு நான்கு வழி பாதையாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தடுக்க, குரோம்பேட்டையில் உள்ளது போல், ரவுண்டான மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது.அதேபோல், சதுப்பு நிலத்தில் தேங்கும் மழைநீர், பகிங்ஹாம் செல்லும் வகையில், இரண்டு சந்திப்புகளிலும் மூடு கால்வாய் அமைக்கப்படுகிறது. சந்திப்பில் துாண்களுக்கு இடையில் மூடு கால்வாய் செல்லும் வகையில், வடிவமைப்பில்மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.