மாமல்லபுரம், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மாமல்லபுரம் கடற்கரை விடுதியில், விழா அரங்கம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் திட்டங்களுக்காக, 20 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, இந்திய, சர்வதேச பயணியர் கண்டு ரசிக்கின்றனர். பயணியர் தங்கும் வசதிக்காக, தனியார் விடுதிகள் ஏராளமாக இயங்குகின்றன. அவற்றில் கட்டணம் அதிகம்.குறைவான கட்டணத்தில் சுற்றுலா பயணியர் தங்குவதற்காக, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின்கீழ், கடந்த 1976 முதல் இங்கு கடற்கரை விடுதி இயங்குகிறது.இயற்கைச்சூழல் கடற்கரை பகுதியில் விடுதி அமைந்துள்ள நிலையில், பயணியர் தங்குவது ஒருபுறமிருக்க, கருத்தரங்கம், மாநாடு, திருமணம்உள்ளிட்ட நிகழ்வுகளையும் நடத்தி, விடுதிக்குவருவாய் கிடைக்கிறது.தற்காலத்திற்கு ஏற்ற வகையில், நவீன அரங்கம் உள்ளிட்ட வசதிகளை அமைக்க வேண்டிய அவசியம் குறித்து, நம் நாளிதழில் விரிவான செய்தி வெளியிடப்பட்டது.மாநாடு, வர்த்தக கண்காட்சி உள்ளிட்டவற்றை ஆண்டு முழுதும் நடத்தும் வகையில், சர்வதேச தரத்தில் உட்கட்டமைப்புகளுடன், விழா அரங்கம் அமைக்கவும், விடுதியை மேம்படுத்தவும், கடந்த ஆண்டு சட்டசபையில் அறிவிக்கப்பட்டது.இத்திட்டத்திற்காக, 20 கோடி ரூபாய் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 'டெண்டர்' உள்ளிட்ட நடைமுறைகளை முடித்து, விரைவில் கட்டுமானப் பணிகள் துவக்கப்படும் என்றும், சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலர்கள் தெரிவித்தனர்.