செங்கல்பட்டு:செங்கல்பட்டு தாலுகாவில், சிங்கபெருமாள் கோவில் குறுவட்டத்திற்கான ஜமாபந்தி, நிறைவு நாள் விழா, கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.சிங்கபெருமாள் கோவில் குறுவட்டத்தில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, பட்டா மாற்றம்கோரி மனுக்கள் அளிக்கப்பட்டன.கடந்த 12ம் தேதி ஜமாபந்தி துவங்கி நேற்று வரை, பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய, 800 மனுக்கள் வரப்பெற்றன. இந்த மனுக்கள் மீது, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கலெக்டர் உத்தரவிட்டார்.தொடர்ந்து, 68 நபர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாற்றம், பட்டா திருத்தம் மற்றும் விலையில்லா தையல் இயந்திரம், சலவை பெட்டிகள் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ், இரண்டு பயனாளிகளுக்கு, சுயதொழில் துவங்க 8 லட்சம் ரூபாய் மானியத்துடன், 46.62 லட்சம் ரூபாய் கடனுதவியை, கலெக்டர் அருண்ராஜ் வழங்கினார்.கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடைநம்பி, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் வித்யா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
ஜாதி சான்றிதழ் கேட்டு பள்ளி மாணவர்கள் 'மனு'
மதுராந்தகம் தாலுகாவில், வருவாய் தீர்வாய அலுவலரான, கலெக்டரின் நேர்முக உதவியாளர் நரேந்திரன் தலைமையில் நடந்த ஜமாபந்தியில், பெரும்பாக்கம் உள்வட்டத்திற்கான 23 கிராம மக்களிடமிருந்து, 116 மனுக்கள் பெறப்பட்டன.மேலும், மதுராந்தகம் தாலுகாவிற்கு உட்பட்ட சுற்றுவட்டார பகுதி களில் உள்ள பழங்குடி பிரிவைச் சேர்ந்த, 50-க்கும் மேற்பட்டோர் மற்றும் பள்ளி மாணவ - மாணவியர், சாதி சான்றிதழ் அளிக்கக் கோரி மனு அளித்தனர். இந்நிகழ்வில், மதுராந்தகம் வட்டாட்சியர் துரைராஜன் மற்றும் அதிகாரிகள், அப்பகுதிவாசிகளிடம் குறைகளை கேட்டறிந்து, மனுக்களை பெற்றனர்.