மாமல்லபுரம் : மாமல்லபுரத்தில், பேரூராட்சி நிர்வாக கட்டுப்பாட்டில், சுற்றுலா பயணியர் தேவைக்காக, கடற்கரை கோவில் அருகில், ஆரோவில் குளியலறைகள் மற்றும் கழிப்பறைகள் வளாகம் உள்ளது.பேருந்து நிலையம் அருகில், துாய்மை பாரத சுகாதார இயக்க கழிப்பறை, வெண்ணெய் உருண்டை பாறை, கலங்கரை விளக்கம் உள்ளிட்ட பகுதிகளில், தற்காலிக கழிப் பறைகள் உள்ளன.பேரூராட்சி நிர்வாகம், நிதியாண்டு அடிப்படையில் பொது ஏலம் நடத்தி, ஆண்டு குத்தகைக்குதனியாரிடம் அளிக்கும்.லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, ஏலத்தை தவிர்த்து, அவற்றை நிர்வாகமே நடத்தியது. ஜூலை மாதம் துவங்கி, அடுத்த ஆண்டு மார்ச் வரை, குத்தகைக்கு தனியார் நடத்த, ஜூலை 5ம் தேதி பொது ஏலம் நடத்த, நிர்வாகம் ஏற்பாடு செய்தது.ஆரோவில் வளாக ஏலத்தில் யாரும் பங்கேற்கவில்லை. மற்ற கழிப்பறைகள் ஏலத்தில், ஏல ஆரம்ப கேட்பு தொகை அதிகம் என, யாரும் ஏலம் கோராததால் ஒத்திவைக்கப்பட்டது.நேற்று முன்தினம் மீண்டும் ஏலம் நடத்தப்பட்டது. ஏலத்தில் பங்கேற்றோர், ஆரம்ப கேட்பு தொகையை குறைக்க வலியுறுத்தி ஏலம் கோராததால், மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. ஏலம் ஒத்திவைக்கப்பட்ட இரண்டு முறையும், பேரூராட்சி செயல் அலுவலர் பங்கேற்கவில்லை.மூன்று முறை ஏலம் ஒத்தி வைக்கப்பட்டால், ஆரம்ப கேட்பு தொகையை குறைக்க, அரசிடம் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி பெறும். அதற்காகவே, ஏலம் கோரும் நபர்களுக்கு சாதகமாக, ஏலத்தை அடுத்தடுத்து ஒத்திவைப்பதாக, பேரூராட்சி நிர்வாகிகள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.