| ADDED : ஆக 09, 2024 01:57 AM
மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் கிராமத்தில், பாலுார் - சிங்கபெருமாள் கோவில் சாலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இதில், 50க்கும் மேற்பட்ட குழந்தைகள் பயில்கின்றனர்.இந்த பள்ளி வளாகத்தில், கடந்த 1972ம் ஆண்டு கட்டப்பட்ட ஓடு வேயப்பட்ட கட்டடம் உள்ளது.சில ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருந்து வந்த வகுப்பறை கட்டடம், மோசமான அளவில் சேதமடைந்ததால், இதே வளாகத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டு, பள்ளி குழந்தைகள் வகுப்பறை மாற்றப்பட்டது.இருப்பினும், பழைய கட்டடம் அகற்றப்படாததால், அதன் அருகில் காலை நேரங்களில் ஆசிரியர்கள் வரும்முன் குழந்தைகள் விளையாடி வருகின்றனர்.இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:கடந்த 2021ம் ஆண்டு, திருநெல்வேலி மாவட்டத்தில் வகுப்பறை கட்டடம் இடிந்து விழுந்து, மூன்று குழந்தைகள் உயிரிழந்தனர். தற்போது, பாலுார் பள்ளி வளாகத்தில், 50 ஆண்டுகளை கடந்த கட்டடம் இருப்பது அச்சமாக உள்ளது.ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன், பழைய கட்டத்தை இடித்து அகற்றி, அந்த பகுதியில் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு உபகரணங்கள் அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.