புதுப்பட்டினம்:கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சியில், 14 துாய்மைப் பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். வசிப்பிடம், வர்த்தக பகுதிகளில், தினமும் குப்பை அகற்றுகின்றனர்.அவர்களுக்கு மாத ஊதியமாக, தலா 5,000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஊராட்சி நிர்வாகம், ஊதிய தொகையை மகளிர் சுய உதவிக்குழு கூட்டமைப்பு நிர்வாகத்திடம் அளித்து, அந்நிர்வாகம் பணியாளர்களுக்கு ஊதியம் அளிப்பது நடைமுறையில் உள்ளது.இவ்வூராட்சி பணியாளர்களுக்கான ஊதியம், சில மாதங்களாக குறித்த நாளில் வழங்கப்படாமல் அலைகழிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், குறித்த நாளிற்குள் ஊதியம் வழங்காததை கண்டித்து, நேற்று முன்தினம், பழைய கிழக்கு கடற்கரை சாலையில், துாய்மைப் பணி செய்யும் பெண்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சித் தலைவர் காயத்ரி, கல்பாக்கம் போலீசார், அவர்களிடம் பேச்சு நடத்தினர்.ஊராட்சி நிர்வாகம், விதிமுறைகளின்படி, மகளிர் குழு கூட்டமைப்பிடம் குறித்த காலத்தில் ஊதியத்தொகை அளிப்பதாக தெரிவித்த தலைவர், தாமதம் தொடர்பாக மகளிர் கூட்டமைப்பிடம் முறையிடுமாறும் கூறினார். அதனால், 15 நிமிட மறியலை கைவிட்டு, அப்பெண்கள் கலைந்தனர்.இதுதொடர்பாக, கல்பாக்கம் போலீசார், 13 துாய்மைப் பணி பெண்கள் மீது வழக்கு பதிந்தனர். மகளிர் கூட்டமைப்பு அலுவலகத்திற்கு மின் கட்டணம் செலுத்தப்படாததால், மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என்றும், அதனால் ஊதியம் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது.