மாமல்லபுரம்: தமிழக சுற்றுலாத்துறை, மீடியா பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, கடந்த 2022 முதல் சர்வதேச காற்றாடி திருவிழாவை, மாமல்லபுரத்தில் நடத்துகிறது.மூன்றாம் ஆண்டாக, மாமல்லபுரம் அடுத்த திருவிடந்தையில், ஹிந்து சமய அறநிலையத்துறையின் நித்ய கல்யாண பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், கடந்த ஆக., 15ம் தேதி முதல், நேற்று முன்தினம் வரை நடத்தப்பட்டது.இதில், 250க்கும் மேற்பட்ட காற்றாடிகளை பறக்கவிட, மாமல்லபுரத்தில் பரந்த இடமில்லாததால், திருவிடந்தையில், 40 ஏக்கர் இடத்தில் நடத்தப்பட்டது.பெரியவர்களுக்கு தலா 200 ரூபாய் நுழைவுக்கட்டணம் வசூலித்து, 12 வயதிற்கு குறைவானவர்கள் இலவசமாக அனுமதிக்கப்பட்டனர். இதுமட்டுமின்றி, 650 ரூபாய் தனி கட்டணத்தில், தினசரி இசை நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.காற்றாடி திருவிழா என்ற போர்வையில், பிரமாண்ட வர்த்தக கண்காட்சியும் நடத்தப்பட்டு, பயணியர் அலைக்கழிக்கப்பட்டனர். நுழைவிட பகுதியில் அமைக்கப்பட்ட ஜெர்மன் கூடாரத்தில், வீட்டு உபயோக பொருட்கள், ஷோபா, கட்டில், இருசக்கர வாகனங்கள் உள்ளிட்ட ஏராளமான விற்பனை அரங்குகள் இடம்பெற்றன.அதன் வெளியே, சைவ, அசைவ உணவு வகைகள், தின்பண்டங்கள், குளிர்பானம் உள்ளிட்ட கடைகளும் இயங்கின. பயணியரை காற்றாடி பறக்கவிட்ட இடத்திற்கு நேரடியாக அனுப்புவது தவிர்க்கப்பட்டது.கடைகள் வியாபாரம் கருதி, வர்த்தக அரங்கம் வழியே அனுப்பினர். அங்கு அரங்குகளே பிரதானமாக அமைந்து, பாதைக்கு மிக குறுகிய இடமே ஒதுக்கப்பட்டிருந்தது.அனைத்து கடைகளையும், பயணியர் பார்வையிட்டு பொருட்கள் வாங்குவதற்கேற்ப, சில சுற்றுகள் சுற்றிச் சென்று, அங்கிருந்து வெளியேறிய பிறகே காற்றாடி பறக்கும் இடம் செல்வதாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இத்தகைய அடாவடிகளால் பயணியர் நடக்க முடியாமல் மூச்சுத் திணறினர். முதியோர், பெண்கள், சிறுவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். கடலோர மணற்பரப்பில் நீண்டநேரம் நடந்து, இளைப்பாற நிழற்பகுதி இன்றி திண்டாடினர்.அதுமட்டுமின்றி, அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழுள்ள வைணவ கோவில் இடத்தில், பிரியாணி உள்ளிட்ட அசைவ உணவு வினியோகித்து, ஆன்மிக நடைமுறை விதிகளும் புறக்கணிக்கப்பட்டன.கோவிலுக்கு சொந்தமான 45 ஏக்கர் இடத்தை, ஒரு நாளிற்கு 15,000 ரூபாய் வீதம், நான்கு நாட்களுக்கு, 60,000 ரூபாய் மட்டுமே, வாடகையாக கோவில் நிர்வாகத்திற்கு அளித்துள்ளதாக, கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.கிழக்கு கடற்கரை சாலையை ஒட்டியே விழா நடந்ததால், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சர்வேதச காற்றாடி திருவிழா போர்வையில், பணம் சம்பாதிக்கும் குறிக்கோளுடன் வர்த்தக கண்காட்சி நடத்தப்பட்டது, பொதுமக்களிடம் சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது.