செம்பாக்கம், : தாம்பரம் மாநகராட்சி, மூன்றாவது மண்டலம், செம்பாக்கத்தில் வார்டுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி, தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு வார்டிலும், இப்பணியை மேற்கொள்ள, ஆறு வாகனங்கள், 30 துாய்மை பணியாளர்கள் ஒதுக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஒரு வார்டில் கூட பணியாளர்கள் எண்ணிக்கை முழுதாக இருப்பதில்லை.தினசரி, 2, 3 பேர் மட்டுமே வருகின்றனர். அதேபோல், வாகனங்களும் குறைவாகவே வருகின்றன. இதனால், அனைத்து வீடுகளிலும் குப்பை சேகரிக்காமல் ஆங்காங்கே தேங்கி கிடப்பதாக, புகார் எழுந்துள்ளது.அப்பகுதி மக்கள் கூறியதாவது:மூன்றவாது மண்டலத்தில், ஒவ்வொரு மண்டலத்திலும் குப்பை சேகரிக்கும் பணி சுணக்கமாக நடந்து வருகிறது. குறைந்த ஊழியர்கள் பணிக்கு வருவதால், நிர்ணயிக்கப்பட்ட வீடுகளில் குப்பை எடுக்க முடியவில்லை. அந்த வீடுகளில் நாள் கணக்கில் குப்பை தேங்கி, சுகாகார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. தனியார் நிறுவன ஊழியர்களிடம் கேட்டால், 11 கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அதிகாரிகள் கமிஷன் கேட்கின்றனர். அதனால், பணி செய்ய முடியவில்லை என்கின்றனர்.அதேபோல், மாநகராட்சி நிரந்தர பணியாளர்கள் 17 பேர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்கின்றனர். மற்றொரு புறம், தினக்கூலி ஊழியர்கள் 10 பேர், அலுவலகத்தில் டீ, காபி வாங்கி கொடுக்கும் பணி செய்து வருகின்றனர்.வணிகரீதியான குப்பை விஷயத்தில் கவனம் செலுத்தும் ஊழியர்கள், வீடுகளில் குப்பை எடுப்பதில் கவனம் செலுத்துவதில்லை. நகராட்சியாக இருந்த போது, முறையாக குப்பை எடுக்கப்பட்டது. மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட பின், எதுவும் நடக்கவில்லை.இவ்வாறு அவர்கள் கூறினர்.