| ADDED : ஜூலை 05, 2024 12:29 AM
கூடுவாஞ்சேரி:நந்திவரம்- - கூடுவாஞ்சேரி நகராட்சி சுற்றுவட்டார பகுதியில், நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, இடியுடன் பலத்த மழை பெய்தது.மழை பெய்தவுடன், சுற்றுவட்டார பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. ஊரப்பாக்கம், காயரம்பேடு, நாராயணபுரம், கூடுவாஞ்சேரி, பெருமாட்டுநல்லுார் உள்ளிட்ட பகுதிகளில், இரவு முழுதும் மின்தடை நீடித்தது. தொடர்ந்து, நேற்று காலை 5:00 மணி வரை நீடித்த மின் தடையால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை துாக்கமின்றி தவித்தனர்.இதுகுறித்து, சமூக ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:ஏற்கனவே, சுற்றுவட்டார பகுதிகளில் ஏற்படும் தொடர் மின் தடையால், பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நேற்று ஏற்பட்ட திடீர் மழையால்,கூடுவாஞ்சேரியில் உள்ள போக்குவரத்து சிக்னல்கள் இயங்கவில்லை.இதனால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். எனவே, சுற்று வட்டாரப்பகுதிக்கு சீரான மின் வினியோகம் கிடைக்க, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.