| ADDED : ஆக 06, 2024 10:53 PM
மறைமலை நகர்,:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 20,000ரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. 200க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள், ஹோட்டல்கள், தனியார் மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளிட்டவை உள்ளன.சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள், அடிப்படை தேவைகளுக்கு இங்கு வந்து செல்கின்றனர்.இங்கு, ஜி.எஸ்.டி., சாலை, அனுமந்தபுரம் சாலை, ஒரகடம் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளுக்கு நாள் குரங்குகள் தொல்லை அதிகரித்து வருவதாக, அப்பகுதிவாசிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.இது குறித்து அப்பகுதி வாசிகள் கூறியதாவது:சிங்கபெருமாள் கோவில் பகுதியில், கடந்த சில மாதங்களாக குரங்கு கள் தொல்லை அதிகரித்துள்ளது. இவை, வீடுகள் மற்றும் கடைகளுக்குள் புகுந்து, தின்பண்டங்களை துாக்கிச் செல்கின்றன.தெருவில் குழந்தைகள் விளையாடும் போது, அவர்களை அச்சுறுத்தல் செய்து வருகின்றன. அனுமந்தபுரம் சாலையில்உள்ள தனியார்மருத்துவமனையில்நோயாளிகளை அச்சுறுத்தி வருகின்றன.இந்த குரங்குகளை விரட்ட, மருத்துவமனை ஊழியர்கள் பட்டாசு வெடித்து வருகின்றனர். இது நோயாளிகளை தொந்தரவு செய்யும் வகையில் உள்ளது. எனவே, இந்த பகுதி யில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து வனப்பகுதியில் விட, ஊராட்சி நிர்வாகம் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.