மாமல்லபுரம் : மாமல்லபுரம் அடுத்த நெம்மேலியில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லுாரி, கடந்த 2011ல் துவக்கப்பட்டது. இங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, புயல் பாதுகாப்பு மையம் ஆகியவற்றில், துவக்கத்தில் இயங்கியது. 2020ல், அரசு கல்லுாரியாக மாற்றப்பட்டது.கல்லுாரிக்கு 10 ஏக்கர் நிலம் வழங்கி, 2016ல் கட்டப்பட்ட புதிய கட்டடத்தில், தற்போது இயங்கி வருகிறது. இளங்கலை தமிழ், வணிகவியல், கணினி பயன்பாடுகள், முதுகலை தமிழ், வரலாறு ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன.புதிய கட்டடம் கட்டப்பட்டு ஏழு ஆண்டுகள் கடந்தும், கல்லுாரி வளாகத்திற்கு, தற்போது வரை சுற்றுச்சுவர் அமைக்கப்படவில்லை. திறந்தவெளியில் பாதுகாப்பின்றி கல்லுாரி வளாகம் உள்ளது.அதனால், மாணவ - மாணவியர், வகுப்பு நேரத்தில் வெளியில் உலவுகின்றனர். கால்நடைகள் வளாகத்திற்குள் சர்வசாதாரணமாக உலவுகின்றன. திறந்தவெளியில் உள்ளதால், இப்பகுதியினர் குப்பை குவிக்கும் இடமாக கல்லுாரி வளாகத்தை பயன்படுத்துகின்றனர்.கல்லுாரி வளாகத்தை, மது அருந்தும் கூடாரமாக சில சமூக விரோதிகள் பயன்படுத்தி வருகின்றனர். கல்லுாரி நிர்வாகத்திற்கு சொந்தமான பொருட்கள், அடிக்கடி திருடு போகின்றன.இந்த கல்லுாரியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதாக, சட்டசபையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அறிவித்த நிலையில், சுற்றுச்சுவர் கட்டுவது மேலும் தாமதமாகி வருகிறது. கல்லுாரி பாதுகாப்பு கருதி, சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.