| ADDED : ஜூன் 21, 2024 10:14 PM
மறைமலை நகர்:திருப்போரூர் ஒன்றியம், அனுமந்தபுரம் ஊராட்சியில், தர்காஸ் பகுதியில் அரசு உயர்நிலைப் பள்ளி உள்ளது.இதில், அனுமந்தபுரம், தர்காஸ், சந்தக்குப்பம், தாசரிகுப்பம், கொண்டமங்கலம் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட மாணவ -- மாணவியர் பயில்கின்றனர்.இவர்கள் பள்ளிக்கு சென்று வர, அனுமந்தபுரம் -- சிங்கபெருமாள் கோவில் தடத்தில் செல்லும் அரசு பேருந்தை பயன்படுத்தி வருகின்றனர்.அனுமந்தபுரத்தில் இருந்து அரசு பேருந்தில் வரும் மாணவ - மாணவியர், தர்காஸ் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 1 கி.மீ., துாரம் நடந்து செல்லும் நிலை உள்ளது.இதே தடத்தில், விஸ்வநாதபுரம் பகுதியில், காலை மற்றும் மாலை நேரங்களில் பேருந்தை நிறுத்தினால், மாணவர்கள் நடந்து செல்லும் துாரம் சற்று குறைவதோடு, சிரமமின்றி பள்ளிக்கு விரைவாக சென்று வருவர்.இந்த பள்ளி, கடந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவே, மாணவர்கள் நலன் கருதி, விஸ்வநாதபுரம் பகுதியில் கூடுதலாக பேருந்து நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.