| ADDED : ஆக 08, 2024 12:22 AM
மதுரவாயல்:கோயம்பேடு காவல் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது இளம்பெண் காணவில்லை என, கடந்த ஜூன் 28ம் தேதி அவரது பெற்றோர், மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.விசாரணையில், இளம்பெண்ணின் மொபைல்போன் 'சிக்னல்' மும்பையில் காட்டியது. இதையடுத்து, ஜூலை 19ம் தேதி மும்பை சென்ற மதுரவாயல் போலீசார், அவரை மீட்டு சென்னைக்கு அழைத்து வந்தனர். இவ்வழக்கு விருகம்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. இதில், பல திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.இளம்பெண்ணின் சித்தப்பா மகனான, 22 வயது வாலிபர், இவரை ஆபாசமாக மொபைல் போனில் படம் எடுத்து, மிரட்டி வந்துள்ளார். வாலிபர் மும்பை சென்ற நிலையில், ஆபாச படங்களை அழிக்க வேண்டும் என்றால், பணம் மற்றும் நகையுடன் மும்பை வர வேண்டுமென, இளம்பெண்ணை மிரட்டியுள்ளார்.பயந்து போன அப்பெண், வீட்டில் இருந்த நகை, பணத்தை எடுத்துக் கொண்டு மும்பைக்கு சென்றார். அங்கு அவருக்கு மயக்க மருந்து கொடுத்து, வாலிபர் பாலியல் பலாத்காரம் செய்தது தெரிந்தது. இதையடுத்து, விருகம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில், அந்த வாலிபர் தெலுங்கானாவில் இருப்பது தெரிந்தது.நேற்று முன்தினம் தெலுங்கானா விரைந்த தனிப்படை போலீசார், அந்த வாலிபரை கைது செய்து, நேற்று சென்னைக்கு அழைத்து வந்து விசாரிக்கின்றனர்.