| ADDED : ஆக 17, 2024 07:45 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இதில், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த, 92 மாணவ - மணவியர் படிக்கின்றனர்.இப்பள்ளியில், தலைமை ஆசிரியர் உட்பட நான்கு ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், இரண்டு ஆசிரியர்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டதால், தற்போது தலைமை ஆசிரியர் உட்பட இரண்டு ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக, பெற்றோர்கள் கூறுகின்றனர்.இதுகுறித்து பெற்றோர்கள் கூறியதாவது:கடந்த மாதம் இரண்டு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதிலாக, இரண்டு புதிய ஆசிரியர்கள் பணிக்கு வந்தனர்.அவர்களும் இரண்டே நாட்களில், வேறு பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். தற்போது, தலைமை ஆசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இதனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது.எனவே, மாணவர்களின் கல்வி நலன் கருதி, மேற்கண்ட பள்ளிக்கு புதிய ஆசிரியர்களை நியமிக்க, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.