மாமல்லபுரம்:செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 கிராம ஊராட்சிகளை பேரூராட்சிப் பகுதியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. அதனால், மாவட்டத்தில் பேரூராட்சிகளின் எண்ணிக்கை, 22ஆக உயர்கிறது.ஆங்கிலேயர் காலத்தில், பொதுமக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற, நகராட்சி மற்றும் பஞ்சாயத்து போர்டு ஆகிய இரண்டு உள்ளாட்சி நிர்வாகங்கள் இயங்கின.நாட்டின் சுதந்திரத்திற்கு பின், சில ஆண்டுகள் கடந்து, கிராம ஊராட்சிகளை ஒருங்கிணைத்து, ஊராட்சி ஒன்றியம் தோற்றுவிக்கப்பட்டது.நாளடைவில், மக்கள்தொகை 5,000க்கும் மேல் அதிகரித்த ஊராட்சிப் பகுதிகள், நகர பஞ்சாயத்து என தரம் உயர்த்தப்பட்டன.நகர பஞ்சாயத்து நிர்வாகத்தை, கடந்த 1971ல், பேரூராட்சி என, தமிழக அரசு மாற்றியது. தமிழக உள்ளாட்சிகளில், பேரூராட்சி நிர்வாகம் குறிப்பிடத்தக்கது.துவக்கத்தில், 651 பேரூராட்சிப் பகுதிகள், ஊரக வளர்ச்சி நிர்வாக சட்டத்தின்கீழ் செயல்பட்டன. கடந்த 1994 முதல், நகர் பாலிகா எனப்படும் நகராட்சி நிர்வாக சட்டத்தின்கீழ், இந்த நிர்வாக அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.இச்சட்டத்தின்கீழ் செயல்படுவதால், பேரூராட்சி நிர்வாகத்தின் அதிகாரம் படிப்படியாக குறைக்கப்பட்டு, நிர்வாக அமைப்பு சீர்குலைந்து வருவதாக, உள்ளாட்சி துறையினரிடம் அதிருப்தி நிலவுகிறது.ஆண்டு வருமானம் குறைவாக இருந்த பேரூராட்சி பகுதிகள், கிராம ஊராட்சி பகுதிகளாக தரம் குறைக்கப்பட்டன. இத்தகைய போக்கால், பேரூராட்சிகள் குறைந்து, 490 பேரூராட்சிகளே தற்போது செயல்படுகின்றன.அரசு, பேரூராட்சி நிர்வாகத்தை சீர்குலைக்கும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, உள்ளாட்சி துறை அதிகாரிகள் கவலை தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்டத்தில், இதற்கு முன், 10 பேரூராட்சிகள் செயல்பட்டு வந்தன. அதன் பின், அவை பல காரணங்களை கூறி, ஆறு பேரூராட்சிகளாக குறைக்கப்பட்டன.இந்நிலையில், வளர்ச்சியடைந்த கிராம ஊராட்சிகளை, தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் அமைப்பு திருத்த சட்டம் 1988, பிரிவு 3 (1)(ஏ)ன்படி, பேரூராட்சியாக தரம் உயர்த்த, தமிழக அரசு முடிவெடுத்துள்ளது.செங்கல்பட்டு மாவட்டத்தில், 16 கிராம ஊராட்சிப் பகுதிகள், அவ்வாறு தரம் உயர்த்தப்பட உள்ளன. மேலும், மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், இடைக்கழிநாடு, கருங்குழி, அச்சிறுபாக்கம் ஆகிய பேரூராட்சி பகுதிகளுடன், அருகில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகள் இணைக்கப்பட உள்ளன.இது தொடர்பாக, பேரூராட்சிகள் இயக்குனரகம் அறிக்கை கேட்டுள்ளதாக, கலெக்டர் ராகுல்நாத், ஊராட்சிகள் உதவி இயக்குனரிடம் தெரிவித்து, அதற்கான அறிக்கை அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
தரம் உயர்த்த தேர்வான ஊராட்சிகள்
ஊராட்சி ஒன்றியம்= ஊராட்சிகள்திருக்கழுக்குன்றம்= புதுப்பட்டினம், சதுரங்கப்பட்டினம்திருப்போரூர் =கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், நாவலுார், தாழம்பூர், புதுப்பாக்கம்காட்டாங்கொளத்துார் =வண்டலுார், ஊரப்பாக்கம், நெடுங்குன்றம், சிங்கபெருமாள்கோவில், ஆலப்பாக்கம், வல்லம்லத்துார் =செய்யூர்சித்தாமூர் =சூணாம்பேடு