மறைமலை நகர்:மறைமலை நகர் நகராட்சியில், 117 இடங்களில் பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில், 42 பூங்காக்கள் பராமரிப்பின்றி, முற்றிலும் சீரழிந்த நிலையில் உள்ளன. பராமரிப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட தனியார் நிறுவனத்தின் ஒப்பந்த காலம் முடிவடைந்து விட்டதால், அவற்றை பராமரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நகராட்சி நிர்வாகமும் கைவிட்டு விட்டதால், மற்ற பூங்காக்களின் பராமரிப்பும் கேள்விக்குறியாகியுள்ளது.மறைமலை நகர் நகராட்சி, சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமத்தின் வாயிலாக உருவாக்கப்பட்டு, தற்போது சிறப்பு நிலை நகராட்சியாகவும் தரம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த நகராட்சி, 16 வருவாய் கிராமங்களை உள்ளடக்கி, 21 வார்டு பகுதிகளை கொண்டுள்ளது.இதன் மொத்தப் பரப்பளவு 58.08 சதுர கிலோ மீட்டர். இங்கு, 30,000த்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 500க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன. தனியார் நிறுவனம்
மறைமலை நகர் சிப்காட் பகுதியில், 270க்கும் மேற்பட்ட மோட்டார் வாகன உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் வாடகைக்கு தங்கி வேலை பார்த்து வருகின்றனர்.மேலும், சுற்றியுள்ள 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து, மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு, தினமும் மறைமலை நகர் வந்து செல்கின்றனர்.மறைமலை நகரின் 21 வார்டுகளில், 371 இடங்கள் பூங்கா அமைப்பதற்காக ஒதுக்கப்பட்டு உள்ளன. இதில், நகராட்சி சார்பில், 117 பூங்காக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.அவற்றில், சிமென்ட் கற்கள் கொண்ட நடைபாதைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டு உள்ளன. இந்த பூங்கா அனைத்தையும் பராமரிக்கும் பணி, சில தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர் விடப்பட்டது.தற்போது, இந்த டெண்டர் காலம் முடிந்து மூன்று மாதங்கள் ஆன நிலையில், பல பூங்காக்கள் பயன்பாடு இல்லாமல் வீணாகி வருகின்றன. நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்க முயற்சி எடுக்கவில்லை என, அப்பகுதிவாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்.இது குறித்து, மறைமலை நகர் பகுதிவாசிகள் கூறியதாவது:மறைமலை நகர் நகராட்சியில், வார்டுக்கு தலா 3 முதல் 4 பூங்காக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பூங்காக்கள் பலவற்றில் மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. சமூக விரோதிகள்
திருக்கச்சூர், காட்டாங்கொளத்துார், பேரமனுார், கிழக்கு பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பூங்காக்கள், புதர் மண்டி, பாழடைந்து பல மாதங்களாக பூட்டிக்கிடக்கின்றன.மொத்தம் 42 பூங்காக்கள், எந்தவித பராமரிப்புமின்றி காணப்படுகின்றன. இதன் காரணமாக, இரவு நேரங்களில் சுவர் ஏறி குதித்து, உள்ளே செல்லும் மர்ம நபர்கள் மது அருந்துதல் போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.பூங்கா முறையாக இல்லாததால், குழந்தைகள் தெருக்களில் விளையாடும் நிலை ஏற்பட்டு உள்ளது. அல்லது, 8வது வார்டில் உள்ள நகராட்சி மைதானம் மற்றும் அதன் அருகில் உள்ள பூங்காவிற்கு அழைத்து செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது.ஒரே நேரத்தில், நகரின் பல பகுதிகளில் இருந்து குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என வருவதால், மாலை நேரங்களில் மைதானம் நெரிசலாக மாறுகிறது. எனவே, அந்தந்த பகுதிகளில் உள்ள பூங்காக்களை முறையாக பராமரித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.கடந்த 2ம் தேதி நடைபெற்ற நகரசபை கூட்டத்தில், பூங்காக்களை மேம்படுத்துவது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. புதிதாக, 20க்கும் மேற்பட்ட பூங்காக்கள் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.- நகராட்சி அதிகாரிகள், மறைமலை நகர்
மழைநீரில் மூழ்கிய கலைஞர் பூங்கா
மறைமலை நகர் நகராட்சி, 20வது வார்டு, ஸ்ரீவாரி நகரில், கடந்த 2022ம் ஆண்டு கலைஞர்நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 49.50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், சிறுவர்கள் விளையாட்டு பூங்கா அமைக்கப்பட்டது.மின் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், சிசிடிவி கேமராக்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் மற்றும் கழிப்பறை வசதியுடன் கலைஞர் பெயர் சூட்டப்பட்ட பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்கா, தற்போது பொலிவிழந்து, சிறு மழைக்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது.இதே பகுதியில், 500 மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள அண்ணா பூங்காவிற்கு உள்ளே செல்வதற்கு கூட பாதை இல்லாமல், சுற்றிலும் மழைநீர் தேங்கி காணப்படுகிறது.