உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / 95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து

95 சதவீத பேருந்துகள் இயக்கம் செங்கையில் இயல்பான போக்குவரத்து

செங்கல்பட்டு:செங்கல்பட்டு பணிமனையில் இருந்து, 73 அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. நேற்று, ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டத்தால், கிராமப்புறங்களுக்கு சென்ற 24 பேருந்துகள் உட்பட, 46 பேருந்துகள் இயக்கப்பட்டன.இந்த பணிமனையில், அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., - பா.ம.க., - பி.எம்.எஸ்., - ஏ.பி.எல்.ஏப்., ஆகிய சங்கங்கள் போராட்டத்தில் பங்கேற்றன.தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மட்டும், போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இதனால், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு செல்வோர், ரயில்களில் பயணித்தனர்.

மதுராந்தகம்

காஞ்சிபுரம், மதுராந்தகம், திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகள் குறைவாக சென்றன.செங்கல்பட்டு நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 25 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மதுராந்தகம் பணிமனையில், தி.மு.க.,வின் தொழிற்சங்கம், எச்.எம்.எஸ்., - வி.சி., - ஐ.என்.டி.யு.சி., சங்கத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்கவில்லை. அ.தி.மு.க., தொழிற்சங்கம் மற்றும் சி.ஐ.டி.யு., ஆகியவை போராட்டத்தில் பங்கேற்றன.இருப்பினும், மதுராந்தகம் பணிமனையில், நகர பேருந்துகள் 23, புறநகர் பேருந்துகள் 22 என, 40க்கும் மேற்பட்ட பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின.வேலை நிறுத்த போராட்டத்தால், தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வருவதாகவும், அதனால் ஓய்வற்ற மன உளைச்சலில் பணியாற்றி வருவதாகவும், ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் வேதனை தெரிவித்தனர்.

கல்பாக்கம்

கல்பாக்கத்தில் இருந்து செங்கல்பட்டு, தாம்பரம் போன்ற பகுதிகளுக்கு, பணிமனையின் 95 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டதாக, நிர்வாகத்தினர் தெரிவித்தனர். மதுராந்தகம் - திருக்கழுக்குன்றம் இடையிலான நகரப் பேருந்துகளும் இயங்கின.

போராட்டம் நடத்துவது அவர்களின் உரிமை

கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், நேரில் ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:போக்குவரத்து தொழிற்சங்கங்கள், ஆறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. அதில், நான்கு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.எனவே, அனைத்து ஊழியர்களும் பணிக்கு வர வேண்டும் என்பது தான் தமிழக அரசின் கோரிக்கை. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம். அறிவிக்கப்பட்ட வேலை நிறுத்தத்தில், அமைதியான முறையில் போராட்டம் நடத்துவது அவர்களது உரிமை. அவர்கள் மீது அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காது.அதே சமயம், பொதுமக்களை பாதிக்கக்கூடிய வகையில், பேருந்தை நடுவழியில் நிறுத்தி செல்வது, பேருந்துகளை இயக்க இடையூறு செய்தல் உள்ளிட்ட அரசு பணிக்கு குந்தகம் விளைவிப்போர் மீது, அரசு கடும் நடவடிக்கை எடுக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ