| ADDED : மார் 05, 2024 10:27 PM
மறைமலை நகர்:மறைமலை நகர் காவல் நிலையம், தாம்பரம் போலீஸ் கமிஷனரக கட்டுப்பாட்டில், கடந்த 2022ம் ஆண்டு, ஜனவரி மாதம் முதல் செயல்பட்டு வருகிறது.இந்த காவல் நிலையம், தென்மாவட்டங்களில் இருந்து வரும் போது, தாம்பரம் கமிஷனரக கட்டுப்பாட்டு எல்லையின் துவக்கப் பகுதி.மறைமலை நகர் காவல் நிலையத்தின் துவக்கப் பகுதியாக, மகிந்திரா சிட்டி திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலை உள்ளது.காவல் நிலைய எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து, வாகனங்கள் மற்றும் சந்தேகப்படும் வகையில் சுற்றும் நபர்களை கண்காணிப்பது போலீசாரின் வழக்கம்.ஆனால், கமிஷனரகம் பிரிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில், இந்த பகுதியில் சோதனைச்சாவடி அமைக்கப்படாமல் இருந்தது.இதனால், மகேந்திரா சிட்டியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் இரவு பணி முடித்து வருவோரை தாக்கி, மொபைல் போன் பறிக்கும் சம்பவங்கள், அடிக்கடி நடைபெற்று வந்தன.எனவே, இந்த எல்லைப்பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து, போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது குறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.தற்போது, மறைமலை நகர் போலீசார் இந்த பகுதியில் சோதனைச்சாவடி அமைத்து, கண்காணிப்பு பணியில், 24 மணி நேரமும் ஈடுபட்டு வருகின்றனர்.