உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்

செங்கல்பட்டு:புகார் பெட்டி;குழாய் இணைப்பு சேதம் பாலூரில் வீணாகும் குடிநீர்

குழாய் இணைப்பு சேதம் பாலுாரில் வீணாகும் குடிநீர்

காட்டாங்கொளத்துார் ஒன்றியம், பாலுார் ஊராட்சியில், காஞ்சிபுரம் -- செங்கல்பட்டு சாலையில், பாலுார் ரயில் நிலையம் அருகில், ஊராட்சி சார்பில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது.இந்த குழாய் உடைந்து, தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. ஏற்கனவே குடிநீர் பற்றாக்குறையால் கிராம மக்களும், ரயில் பயணியரும் தவித்து வருகின்றனர்.ஆகையால், உடைந்த குழாய்களை மாற்றி, கிராம மக்களுக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- எம்.பெருமாள், பாலுார்.\

சிறுசேரி பேருந்து நிறுத்தத்தில் ஓய்வெடுக்கும் மாடுகளால் அவதி

திருப்போரூர் அடுத்த ஓ.எம்.ஆர்., சாலை ஏகாட்டூரில், சிறுசேரி பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, சிறுசேரி சிப்காட் செல்லும் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தில் சென்று வருகின்றனர்.இந்நிலையில், இப்பகுதியில் சுற்றித்திரியும் மாடுகள், இந்த பேருந்து நிறுத்தத்தில் தான் படுத்து ஓய்வெடுக்கின்றன. இது, அப்பகுதிவாசிகளுக்கும், பேருந்துக்காக காத்திருக்கும் பயணியருக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.எனவே, சாலையில் உலவும் மாடுகளை கட்டுப்படுத்த, மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மட்டுமின்றி, அவற்றின் உரிமையாளர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும்.- எம்.பாண்டின், சிறுசேரி.

தெருவா... மாட்டு தொழுவமா? கடலுார் பள்ளி அருகே அவலம்

கூவத்துார் அடுத்த கடலுார் ஊராட்சியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியை ஒட்டிஉள்ள தெருவில், பேவர் பிளாக் சாலை அமைக்கப்பட்டுள்ளது.இத்தெருவில் வசிக்கும் கால்நடை விவசாயிகள், பள்ளி அருகில் சாலையிலேயே மாடுகளை கட்டி வைக்கின்றனர். அதனால், அவற்றின் சாணம், சிறுநீர் கழிவுகளால், அப்பகுதி முழுதும் சாலை சீரழிகிறது.பள்ளியில் சாணத்தின் துர்நாற்றம் வீசுவதால், மாணவ - மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் அருவருப்புடன் பாடம் படிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.அது மட்டுமின்றி, அப்பகுதிவாசிகள் அந்த தெருவில் நடந்து செல்லவே இயலவில்லை. எனவே, சாலையில் மாடு கட்டுவதை தடுக்கவும், மீறி கட்டுவோர் மீது காவல் துறையில் புகார் அளித்து நடவடிக்கை எடுக்கவும், ஊராட்சி நிர்வாகம் முயற்சிக்க வேண்டும்.- எம்.குமாரவேல், கடலுார்.

அச்சிறுபாக்கம் நெடுஞ்சாலையில் மண் குவியலால் விபத்து அபாயம்

அச்சிறுபாக்கம் பகுதியில், புறவழிச்சாலை மேம்பாலத்தின் இறக்கத்தில், மண் குவியல் உள்ளது. அதனால், புறவழிச்சாலையில் இருந்து வரும் இருசக்கர வாகனங்கள் மற்றும் பேருந்துகள் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் பகுதியில், மண் சறுக்கி, அடிக்கடி விபத்துகளில் சிக்குகின்றன.வாகனங்கள் வேகமாக செல்லும் போது, துாசு பறந்து வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கின்றன. எனவே, தேசிய நெடுஞ்சாலை துறையினர், உடனடியாக மண் குவியலை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ம.கங்காதரன், அச்சிறுபாக்கம்.

சாலையோரம் கொட்டப்படும் இறைச்சி கழிவுகளால் ஆபத்து

செய்யூர் அருகே தேவராஜபுரம் பகுதியில் இருந்து தண்ணீர்பந்தல் செல்லும் தார் சாலை ஓரத்தில், இறைச்சி கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதனால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய்தொற்று பரவும் அபாய நிலை உள்ளது.ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, சாலை ஓரத்தில் இறைச்சி கழிவுகள் கொட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- கா.ரவிச்சந்திரன், செய்யூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை