உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கிராம பகுதிகளுக்கு செல்ல மறுப்பு கால்நடை மருத்துவர்கள் மீது புகார்

கிராம பகுதிகளுக்கு செல்ல மறுப்பு கால்நடை மருத்துவர்கள் மீது புகார்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சியில், மலையடி வேண்பாக்கம் கிராமத்தில் உள்ள கால்நடை மருத்துவமனை உட்பட, 25 கால்நடை மருத்துவமனைகள் உள்ளன.இங்கு கால்நடைகள், நாய்கள் உள்ளிட்ட விலங்குகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் வாயிலாக, ஒவ்வொரு ஆண்டும் மார்ச், செப்டம்பர் மாதங்களில், பசு மற்றும் எருமை மாடுகளுக்கு, 100 சதவீதம் மானியத்தில், கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.ஆனால், மாவட்டத்தில், கால்நடை மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் உரிய நேரத்தில் பணிக்கு வருவதில்லை எனவும், கால்நடை பராமரிப்பு உதவியாளர்களே சிகிச்சை அளிப்பதாகவும் விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.இதையடுத்து, மருத்துவர்கள் பணி நேரத்தில் மருத்துவமனையில் இருக்க வேண்டும் என, கால்நடை துறை மண்டல இயக்குனரிடம், விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:மலையடி வேண்பாக்கத்தில் செயல்படும் கால்நடை மருத்துவமனை, காலை 8:00 மணி முதல் பிற்பகல் 12:00 வரையும், மாலை 3:00 மணி முதல் மாலை 5:00 மணி வரையும் இயங்க வேண்டும்.இங்கு, 33 வார்டுகளில் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க, மருத்துவர்கள் மற்றும் பராமரிப்பு உதவியாளர்கள் வருவதில்லை.கால்நடை வளர்ப்போர், மருத்துவமனைக்கு கால்நடைகளை அழைத்து சென்றால், அங்கு மருத்துவர்கள் பணியில் இல்லை எனக் கூறி, பராமரிப்பு உதவியாளர்களே சிகிச்சை அளிக்கின்றனர்.உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், நாய்களுக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. மருத்துவமனைக்கு டாக்டர் வருவதில்லை என, மண்டல இயக்குனரிடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.எனவே, கால்நடைகள் மற்றும் விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க, கால்நடை மருத்துவமனைகளில், பணி நேரத்தில் மருத்துவர்கள் இருக்கும் வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

கால்நடைகள் விபரம்

செங்கல்பட்டு மாவட்டத்தில், 2 லட்சத்து 60 ஆயிரத்து 256 கால்நடைகள் உள்ளன. இதில், 22,232 எருமை மாடுகள், 1 லட்சத்து 38 ஆயிரத்து 410 வெள்ளாடுகள், 63 ஆயிரத்து 719 செம்மறி ஆடுகள் உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ