| ADDED : ஜன 23, 2024 05:35 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில், மும்முனை சாலை சந்திப்பு உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் இருக்கும் இப்பகுதியில், நேற்று காலை போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் போலீசார் இல்லை. தானியங்கி சிக்னலும் செயல்படவில்லை.இதனால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ -- மாணவியர், அலுவலகம் மற்றும் பிற பணிகளுக்கு சென்ற வாகன ஓட்டிகள், போக்குவரத்து விதியை மதிக்காமல் தாறுமாறாக சென்றனர்.மூன்று சாலைகளிலும் எதிரெதிரே வந்தவர்கள், ஒருவரை ஒருவர் முந்திச் செல்ல முயன்றதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.நெரிசலில் சிக்கிய சைக்கிள், இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ஊர்ந்து செல்லக்கூட முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, சக ஆட்டோ டிரைவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் இணைந்து, வானங்களை ஓரங்கட்டிவிட்டு, போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது தெரிந்து, அருகில் இருந்த செங்கல்பட்டு நகர காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்திற்கு வந்து போக்குவரத்தை சீரமைத்தனர். இச்சம்பவம் காரணமாக, செங்கல்பட்டு - காஞ்சிபுரம் சாலையில், நீண்ட நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.