கல்பாக்கம் : கல்பாக்கத்தில் இயங்கும் இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், நகரிய பகுதியில், துாய்மை பாரத இரு வார விழாவை, நேற்று முன்தினம் துவக்கி, வரும் 29ம் தேதி வரை கடைப்பிடிக்கிறது.இப்பகுதி மக்களிடம், இ - வேஸ்ட் எனப்படும், மின் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றி அப்புறப்படுத்துவது குறித்து, நேற்று விழிப்புணர்வு ஏற்படுத்தியது.அணுசக்தி துறை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ - மாணவியர், அணுசக்தி துறை ஊழியர்கள், 'நெஸ்கோ' அமைப்பு தன்னார்வலர்கள் உள்ளிட்டோர், நான்கு இடங்களில் முகாமிட்டு, பழைய தொலைக்காட்சி, கணினி திரைகள், கீ - போர்டு, ஒயர் உள்ளிட்ட 400 கிலோ மின்னணு கழிவுகளை சேகரித்தனர்.மேலும், 350 பழைய நுால்களும் சேகரிக்கப்பட்டன. மின்கழிவுகளை, அதற்கான மேலாண்மை நிபுணர்களிடம் ஒப்படைத்து, பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்படும்.நுால்கள், பள்ளிகள் மற்றும் நுாலகங்கள் ஆகியவற்றுக்கு வழங்கப்படும். இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மைய இணை இயக்குனர் சுரேஷ், அறிவியலாளர் மகாதேவன், நிர்வாக அலுவலர் ஜெஸ்சி ஜகாப் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.சுற்றுப்புற துாய்மை, மின்கழிவுகள் ஏற்படுத்தும் அபாயம், அவற்றை தவிர்ப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.