திருப்போரூர்: கரும்பாக்கம் பள்ளி அருகே உள்ள அபாய வளைவில், வேகத்தடை மற்றும் எச்சரிக்கை 'சிக்னல்' அமைக்க வேண்டுமென, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். திருப்போரூர் - செங்கல்பட்டு சாலை, 27 கி.மீ., துாரம் உடையது. இருவழிப் பாதையாக இருந்த இச்சாலை, 117 கோடி ரூபாய் செலவில், நான்கு வழிப்பாதையாக விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இச்சாலை இடையே கரும்பாக்கம் பகுதி உள்ளது. இப்பகுதி பேருந்து நிறுத்தத்தை ஒட்டி, அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆகியவை ஒரே வளாகத்தில் இயங்குகின்றன. மேலும் இப்பகுதியில் வணிக கடைகள், வீடுகள், மத வழிபாட்டு மையங்கள் உள்ளன. ஆனால், இங்குள்ள சாலை வளைவு பகுதியில், விபத்தை தடுக்கும் வகையில் வேகத்தடை மற்றும் எச்சரிப்பு சிக்னல் போன்ற பாதுகாப்பு வசதிகள் இல்லை. ஏற்கனவே உள்ள வேகத்தடையும், போதிய பாதுகாப்பானதாக இல்லை. இதனால், இந்த வளைவு பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக, பள்ளி மாணவ -- மாணவியர் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையைக் கடக்கும் போது, மரண பயத்தில் கடக்கி ன்றனர். அதேபோல், சாலையை ஒட்டி மீன் கடை உள்ளதால், சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு வாடிக்கையாளர்கள் மீன் வாங்க செல்வதால், அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, விபத்தை தடுக்கும் வகையில், கரும்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள அபாய சாலை வளைவு பகுதியில், மூன்றடுக்கு வேகத்தடை மற்றும் எச்சரிக்கை சிக்னல் அமைக்க, நெடுஞ்சாலைத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.