செங்கல்பட்டு: ''செங்கல்பட்டில், சட்டசபை தொகுதிகளில் வாக்காளர் கணக்கீட்டு படிவங்கள் வழங்கும் பணியில் தாமதம் ஏற்பட்டால், அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, இந்திய துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் எட்ரூ எச்சரிக்கை விடுத்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி கடந்த 4ம் தேதி துவங்கி, வரும் டிச., 4ம் தேதி வரை நடக்கிறது. மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டசபை தொகுதியில் உள்ள 27 லட்சத்து 87 ஆயிரத்து 362 வாக்காளர்களுக்கு, 2,826 ஓட்டுச்சாவடி நிலைய அலுவலர்கள், கணக்கீட்டு படிவங்களின் பிரதிகளை வழங்கி வருகின்றனர். இதற்கிடையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில், கணக்கீட்டு படிவம் வழங்குவது, பெறுவது தொடர்பான ஆய்வுக் கூட்டம், இந்திய துணை தேர்தல் கமிஷனர் பானு பிரகாஷ் எட்ரூ தலைமையில், நேற்று நடந்தது. இதில், மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் சினேகா மற்றும் ஏழு சட்டசபை தொகுதி வாக்காளர் பதிவு அலுவலர்கள் பங்கேற்றனர். இந்த ஆய்வு கூட்டத்தில், கணக்கீட்டு படிவங்கள் வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாகவும், வரும் டிச., 9ம் தேதிக்குள் பணிகளை முடிக்கவில்லை என்றால், வாக்காளர் பதிவு அலுவலர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, இந்திய துணை தேர்தல் கமிஷனர் எச்சரிக்கை விடுத்ததாக, அலுவலர்கள் தரப்பில் தெரிவித்தனர். இதனால், ஊழியர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.