| ADDED : ஆக 03, 2024 12:21 AM
பல்லாவரம், தாம்பரம் மாநகராட்சி, பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், 211 கோடி ரூபாய் செலவில், பாதாள சாக்கடை திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.இத்திட்டத்தில், பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், 4 கி.மீ., துாரத்திற்கு 17 முதல் 18 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன.அதேபோல், பம்மல் - பொழிச்சலுார், பம்மல் - திருநீர்மலை, பல்லாவரம் - திருநீர்மலை சாலைகளிலும், பள்ளம் தோண்டி குழாய் பதிக்கப்பட்டு உள்ளன.குழாய் பதிப்பதற்காக சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களை சரியாக மூடாததால், போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலைக்கு மாறியுள்ளன.குறிப்பாக, பல்லாவரம் - குன்றத்துார் சாலையில், வாகனங்கள் அடிக்கடி சிக்கி பாதிப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக, பல தரப்புகளிடம் இருந்து தாம்பரம் மாநகராட்சிக்கு புகார் வந்தது.இதையடுத்து மாநகராட்சி நிர்வாகம், பாதாள சாக்கடை பணி முடிந்த இடங்களில் சாலையை சீரமைக்க, நெடுஞ்சாலைத் துறைக்கு 10 கோடி ரூபாய் நிதி வழங்கி உள்ளது. நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது:பாதாள சாக்கடை பணி பம்மல் - 75, அனகாபுத்துாரில் 94 சதவீத பணிகள் முடிந்துள்ளன.பணி முடிந்த இடங்களில் ஒட்டு பணி நடந்து வருகிறது. தொடர்ந்து, தார் ஊற்றி சாலை அமைக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.