உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அஞ்சல் துறையில் சிறந்த சேவை 126 அலுவலர்களுக்கு விருது

அஞ்சல் துறையில் சிறந்த சேவை 126 அலுவலர்களுக்கு விருது

சென்னை, தமிழக அஞ்சல் வட்டத்தில் கடந்த நிதியாண்டில் சிறப்பாக பணிபுரிந்த அலுவலர்களுக்கு விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் சமீபத்தில் நடந்தது.தலைமை விருந்தினராக பங்கேற்ற தமிழக வட்ட தலைமை அஞ்சல் துறை தலைவர் மரியம்மா தாமஸ் விருதுகளை வழங்கிப் பேசியதாவது:கடந்த 2023 - -24ம் நிதியாண்டில், தமிழக அஞ்சல் வட்டம், 33.89 லட்சம் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்குகள் உட்பட, 3.14 கோடி கணக்குகளுடன் நாட்டில் முன்னிலையில் இருந்தது.இந்த நிதியாண்டில், இவ்வட்டம், 1,316.80 கோடி ரூபாய் வருவாய் ஈட்டி சாதனை படைத்தது. இதன் வாயிலாக, அனைத்து அஞ்சல் வட்டங்களிடையே இரண்டாவது இடம் பெற்றது.'இந்தியா போஸ்ட் பேமன்ட்' வங்கி வாயிலாக, 2023 - -24-ம் நிதியாண்டில், 31.79 லட்சம் பயனாளிகளுக்கு, 1,384 கோடி மதிப்பிலான தொகை, அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது.மேலும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில், ஏற்றுமதி செய்வதற்காக, 66 உதவி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.அஞ்சல் ஆதார் சேவை மையம் வாயிலாக, 33.59 லட்சம் பேருக்கு புதிதாக ஆதார் எண் பதிவு மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இவ்வாறு அவர் பேசினார்.அதன்பின், அஞ்சல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 126 பேருக்கு, விருதுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில், சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தலைவர் நடராஜன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !