உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு 455ல் 250 வீடுகள் அகற்றம்

ஆற்றங்கரை ஆக்கிரமிப்பு 455ல் 250 வீடுகள் அகற்றம்

எம்.ஜி.ஆர்., நகர், எம்.ஜி.ஆர்., நகரில், அடையாறு ஆற்றின் கரையோரங்களில் உள்ள வீடுகளை அகற்றும் பணி, நேற்று மீண்டும் துவக்கப்பட்டது.சென்னையில் கூவம், அடையாறு ஆற்றின் கரையோரங்களில், 15,300 ஆக்கிரமிப்புகள் அடையாளம் காணப்பட்டு, அகற்றப்பட்டு வருகின்றன.அந்த வகையில், கோடம்பாக்கம் மண்டலத்தில் அடையாற்றை ஒட்டியுள்ள கானுநகர், சூளைப்பள்ளம், ஜாபர்கான்பேட்டை காசி திரையரங்கம் பாலம் வரையுள்ள பகுதி, தாழ்வான நீர்த்தேக்க பகுதியாக உள்ளது. மழைக் காலங்களில், இங்கு தண்ணீர் சூழ்கிறது.இப்பகுதியில் உள்ளவர்களை மறு குடியமர்வு செய்ய, 'பயோ மெட்ரிக்' பதிவு செய்யும் பணிகள் நடந்தன. இதில், 455 வீடுகள் கணக்கிடப்பட்டு, அவற்றை அகற்ற முடிவு செய்யப்பட்டது.இதையடுத்து, எம்.ஜி.ஆர்., நகர் கானுநகரில் ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் துவக்கப்பட்டது. இதில் நேற்று வரை, 250 வீடுகளில் வசித்தவர்கள், பெரும்பாக்கத்திலுள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மறு குடியமர்வு செய்யப்பட்டதுடன், அந்த வீடுகள் இடித்து அப்புறப்படுத்தப்பட்டன. தேர்தல் காரணமாக, மீதமுள்ள 205 ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணி தடைபட்டது. தற்போது, எம்.ஜி.ஆர்., நகர் சூளைப்பள்ளம் பகுதியில் உள்ள வீடுகளை அகற்றும் பணி, நேற்று முதல் துவங்கியது. இதில், 30 வீடுகளில் உள்ளவர்கள், நேற்று அப்புறப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு, செம்மஞ்சேரியில் வீடுகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதையடுத்து, மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பேருந்துகளில், அங்கிருந்தவர்கள் பெரும்பாக்கத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.இன்னும் சில நாட்களில், மற்ற வீடுகளில் உள்ளவர்களையும் மறு குடியமர்வு செய்து, வீடுகள் அகற்றப்படும் என, மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை