| ADDED : ஜூலை 06, 2024 12:35 AM
பொன்னேரி, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த அனுப்பம்பட்டைச் சேர்ந்தவர் ஹரிமுத்து, 65; மாதவரம் அருகே, வெல்டிங் பட்டறைநடத்தி வருகிறார்.இவரது மனைவி பாண்டியம்மாள், 60, மீஞ்சூரில் பழைய துணிகளை சேகரித்து, அதை மறுசுழற்சி செய்யும் கடைக்கு அனுப்பும் தொழில் செய்கிறார்.தம்பதி, நேற்று முன்தினம் காலை, வழக்கம்போல் பணிக்கு சென்று, இரவு வீடு திரும்பினர். வெளியே இரு இரும்பு கதவுகளும் பூட்டப்பட்டிருந்த நிலையில், வாசல் மரக்கதவு உடைக்கப்பட்டிருந்தது.உள்ளே, பீரோவில் இருந்த 40 சவரன் நகை மற்றும் 4.50 லட்சம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இது குறித்து ஹரிமுத்து, மீஞ்சூர் போலீசில் புகார் அளித்தார்.கொள்ளையர்கள், தடயங்களை மறைக்க வீடு முழுதும் மிளகாய் பொடியை துாவி சென்றுள்ளனர். போலீசார், மோப்ப நாய், தடயவியல் நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தனர்.போலீசார் முதற்கட்ட விசாரணையில் வீட்டின் பின்புற சுவர் வழியாக மாடியில் ஏறி, படிக்கட்டுகளில் கீழிறங்கி, கதவை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது. கொள்ளையில் ஈடுபட்டோரை போலீசார் தேடுகின்றனர்.