சென்னை, சென்னை சைதாப்பேட்டையில் உள்ள, அரசு பண்ணை, திடீர் நகர், அப்துல் ரசாக் தெரு, நேரு நகர், கன்னிகாபுரம், களிக்குன்றம், கோட்டூர்புரம் எல்லையம்மன் கோவில் போன்ற இடங்களில் வசிக்கும் மக்களுக்கு பட்டா வழங்குவதற்கான ஆய்வு நேற்று நடந்தது.அமைச்சர் சுப்பிரமணியன் கூறியதாவது:சென்னையில் நத்தம் புறம்போக்கு, நீர் புறம்போக்கு, கோவில்களுக்கு சொந்தமான இடங்களில், 100 ஆண்டுகளுக்கு மேல் வசிப்போருக்கு, 1973ல் தற்காலிக பட்டா வழங்கப்பட்டது. தற்போது, நிரந்தர பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக சோழிங்கநல்லுார் பகுதியில், 67,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. அதேபோல், சைதாப்பேட்டை பகுதியில் 11 இடங்களில் உள்ள, 70,000 முதல் 80,000 குடும்பங்களுக்கு பட்டா வழங்குவதற்கு, மாவட்ட கலெக்டர் ஆய்வு செய்துள்ளார்.ஆய்வின்போது, மக்களின் கோரிக்கை ஏற்று, அரசுக்கு கலெக்டர் அறிக்கை சமர்ப்பிப்பார். விரைவில், அப்பகுதி மக்களுக்கு நிரந்தர பட்டா வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.