காஞ்சிபுரம், காஞ்சிபுரம் அடுத்த, கணபதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாலாஜியின் 5 வயது மகன் நிர்மல்ராஜ். நேற்று, வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தார்.அப்போது, அந்த வழியாக வந்த தெருநாய், சிறுவனின் முகத்தை கடித்துக் குதறியுள்ளது. சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த பெற்றோர், நாயை துரத்த முயற்சி செய்துள்ளனர்.அப்போது, பாலாஜியின் கை மற்றும் காலிலும் நாய் கடித்துள்ளது. அங்கு கிடந்த கட்டையால் நாயை விரட்டி, சிறுவனை மீட்ட பாலாஜி, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றார்.அங்கு தீவிர சிகிச்சைக்குப் பின், சிறுவனை செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுவனை நாய் கடித்த சம்பவம், கணபதிபுரத்தில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.காஞ்சிபுரம் மட்டுமின்றி, சென்னை மாநகராட்சிகளில் நாய்களால் பலர் கடிபட்டு வருகின்றனர். இதை தடுக்கும் விதமாக, மாநகராட்சி பொது இடங்களில் திரியும் மாடுகள் மற்றும் நாய்களை தடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்து நேற்று, அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடந்தது.ரிப்பன் மாளிகையில், மேயர் பிரியா பேசியதாவது:மக்கள் நெருக்கடி அதிகம் உள்ள இடங்களில் மாடுகளை வளர்க்கவும், வெளியில் விடவும் தடை செய்வதற்கு சட்ட ஆலோசனை பெற்று, அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.சாலையில் திரியும் நாய்களை பிடிக்க, 78 பயிற்சி பெற்ற பணியாளர்களும், 16 நாய் பிடிக்கும் வாகனங்களும் பயன்படுத்தப்படுகின்றன. புதிதாக, ஏழு நாய் பிடிக்கும் வாகனங்கள், தடுப்பூசி செலுத்தும் வகையில் மூன்று வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. தெருநாய்கள் கணக்கெடுப்பு துவங்கப்பட்டுள்ளது.மூன்றாவது முறை பிடிபடும் மாடுகளை ஏலம் விடுவதற்கும், பிடிபடும் மாடுகளை பராமரிக்க, சென்னை மற்றும் புறநகர் பகுதியில், கால்நடை பராமரிப்புதுறை மற்றும் வருவாய் துறையினருடன் இணைந்து கூடுதல் இடங்கள் கண்டறியப்படும். அபராத தொகையை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.
ரயில் டிக்கெட் முன்பதிவு
மையத்தில் நாய் தொல்லைசென்னை, அண்ணா நகர் மூன்றாவது அவென்யூ, ஐ.சி.எப்.,பில், தெற்கு ரயில்வேக்கு சொந்தமான ரயில் டிக்கெட் முன்பதிவு மையம் செயல்படுகிறது.இங்கு டிக்கெட் முன்பதிவு செய்ய, காலை 7:30 முதல் மாலை 8:00 மணி வரை, பல்வேறு பகுதிகளில் இருந்து பயணியர் வருகின்றனர்.ஐ.சி.எப்., ரயில்வே இடத்தில் செயல்படும் இந்த மையத்தில், தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, இந்த மையத்தில் நிறைய தெருநாய்கள், காலை முதல் இரவு வரை சுற்றி வருகின்றன. இதனால், டிக்கெட் முன்பதிவு செய்ய வரும் பயணியர், அச்சத்துடன் செல்கின்றனர். சில நேரங்களில், நாய்கள் சண்டையிட்டுக் கொள்வதால், பயணியர் பீதியடைகின்றனர். சம்பந்தப்பட்ட ரயில்வே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.