உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிந்திக்க வைத்த மகான் ஸ்ரீ நாராயண குரு நாடகம்

சிந்திக்க வைத்த மகான் ஸ்ரீ நாராயண குரு நாடகம்

ஹிந்து மத தத்துவங்களில் உள்ள இடைச்செருகல்களை அடையாளம் கண்டு, அதனால் ஏற்படும் தீங்குகளை நீக்கும் தீர்வுகளை கண்டவர் நாராயணன். 19ம் நுாற்றாண்டில், கேரள மாநிலத்தில் நிலவிய சமூக ஏற்றத்தாழ்வுகளை எதிர்த்ததால், பல எதிர்ப்புகளை சந்தித்தவர்.அவர் எப்படி நாராயண குருவாக மாறினார் என்பதை சொல்லும் நாடகம்தான் 'மகான் ஸ்ரீ நாராயண குரு!' மாலி'ஸ் ஸ்டேஜ் சார்பில், மீனா மகாலிங்கம் தயாரித்த இந்த நாடகத்தை எழுதி, இயக்கி இருப்பவர் குடந்தை மாலி.எப்போதோ, எங்கேயோ வாழ்ந்து மறைந்தவரின் கதைதான் என்றாலும், கத்தி மேல் நடக்கும் கவனத்துடன் மேடையாக்கம் செய்யாவிட்டால், அதன் நோக்கம் சிதையும் என்பதே நிச்சயம். தெருவில் நடமாடக்கூடாது, கோவில்களில் நுழையக்கூடாது, பள்ளிகளில் படிக்கக்கூடாது என, சமூகத்தில் விதியின் பெயரால் விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை, கேள்வி கேட்டு சமூக மாற்றத்தை உருவாக்கியவர்.இந்த நாடகத்தில் குழந்தை நாராயணன் சந்திக்கும் சமூக ஏற்றத்தாழ்வுகள், அவன் கல்வி கற்கும் போது ஏற்படும் தடங்கல்கள், குருவிடம் கிடைக்கும் ஞானம் என, படிப்படியாக வேகமெடுக்கிறது.அருவிப்புரம் எனும் இடத்தில், ஆற்றில் இருந்து சிவலிங்கம் எடுத்து வந்து சிவன் கோவிலை கட்டி, அதில் அனைவரும் வணங்கும் வகையில் தன் புரட்சியை துவக்குகிறார். 'கடவுளின் முன் அனைவரும் சமம்' என்னும் அவர், குடிப்பதையும், மதுவை படைப்பதையும் நிறுத்தும் வகையில், சிறுதெய்வ வழிபாட்டை ஒதுக்க சொல்கிறார். அதன் பின்விளைவுகளை கண்டு மனம் கலங்குவதுடன், புதிதாக வள்ளலாரின் வழியில் ஜோதி வழிபாட்டையும் ஊக்குவிக்கிறார்.வைக்கம் போராட்டத்துக்காாக இவரை மகாத்மா காந்தி சந்திப்பது, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வெ.ரா., ஆதரவளிப்பது என, சரித்திர நிகழ்வுகளை இந்த நாடகம் நினைவுபடுத்துகிறது. இவரின் சிந்தனைகளை வங்காளக் கவிஞர் தாகூர் மொழிபெயர்ப்பதாக கூறுவதும், நாட்டுக்கான தத்துவத்தை நாராயண குரு போதிப்பதாகவும் கூறுவது நல்ல அங்கீகாரம்.இப்படி, நாடகம் பல சரித்திர நிகழ்வுகளை சமநிலை பிறழாமல் சொல்கிறது.நாடகத்தில், நாராயணகுருவாக நடித்த கே.ஆர்.எஸ்.குமார், கதைசொல்லியாக கட்டியம் கூறிய கணேஷ், இளம் நாராயணனின் தந்தையாகவும் வளர்ந்தபின் கதையின் பல்வேறு பாத்திரங்களாகவும் பரிமளித்த ஞாயிறு ராமசாமி, அவரின் மனைவியாக வந்த ஆனந்தி, நாராயணன் மணந்து, பின் மறுக்கும் மது, காந்தியாக வரும் பி.பி.கணேஷ், தாகூராக வரும் ரவிகுமார், ரமண மகரிஷியாக மவுன மொழி பேசும் சிவராமன் உள்ளிட்டோரின் நடிப்பை சிலாகிக்கலாம்.எப்போதோ நடந்த கதையாக இருந்தாலும், எப்போதும் தேவைப்படும் கதையாக இருப்பதால் மாலியின் முயற்சிக்கு, ரசிகர்கள் ஆத்மார்த்த பரிசாக கையொலிகளை எழுப்பி கலைகின்றனர்.- --நமது நிருபர் ---


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி