டி.பி.சத்திரம், சென்னை, அயனாவரம், சக்கரவர்த்தி காலனியைச் சேர்ந்தவர் சந்தானலட்சுமி, 50. இவருக்கும், அருகில் வசிப்பவருக்கும் இட பிரச்னை இருந்துள்ளது.இதனால், தன் வீட்டின் நிலத்தை அளப்பதற்காக, ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் ஜூன் 19ல் சந்தானலட்சுமி விண்ணப்பித்துள்ளார். அதற்காக, 700 ரூபாய் கட்டணத்தையும், கடந்த மாதம் 23ல் செலுத்தியுள்ளார்.இதையடுத்து கடந்த மாதம் 26ல், மேற்படி இடத்தை, அயனாவரம் தாலுகா நிள அளவையர் ரஞ்சித்குமார் அளந்து கொடுத்து, மனுதாரரின் மகனிடம் ஒப்புதல் கையொப்பமும் பெற்று வந்துள்ளார்.இந்நிலையில், அயனாவரம் தாசில்தார் அலுவலகத்திற்கு, நேற்று மதியம் 12:10 மணிக்கு மனுதாரரான சந்தானலட்சுமிக்கு ஆதரவாக, வி.சி.க.,வின் 97வது வட்ட செயலர் அசோக் என்பவர் வந்துள்ளார்.அப்போது, அங்கு பணியில் இருந்த, சீனியர் ஆர்.ஐ., யுவராஜ் என்பவரிடம், 'சந்தானலட்சுமியின் இடத்தை முறையாக அளக்கவில்லை; எதிர் தரப்பினருக்கு ஆதரவாக அளந்துள்ளீர்கள்' எனக்கூறி, வீண் தகராறு செய்துள்ளார்.இதுகுறித்து விளக்கம் அளித்த பெண் ஊழிர்களிடம், அவர் ஒருமையில் பேசியுள்ளார். பின், அங்கிருந்த தாசில்தார் அறைக்கு சென்று, தாசில்தார் ரமேஷிடம் வாக்குவாதம் செய்துள்ளார்.இருவருக்கும் வாக்குவதம் முற்றியதால் ஆத்திரமடைந்த அசோக், தாசில்தார் ரமேஷின் சட்டையை பிடித்து இழுத்து, தாக்க முயன்றதாக தெரிகிறது. பதிலுக்கு, தாசில்தாரும் அசோக்கின் சட்டையை பிடித்தாகவும் கூறப்படுகிறது. பின், தாசில்தாரை மிரட்டிவிட்டு அங்கிருந்து அசோக் சென்றுள்ளார்.சம்பவம் தொடர்பாக, தாசில்தார் அலுவலகத்தில் இருந்து வருவாய் அலுவலரான ஆர்.ஐ., பிரேமா என்பவர், மதியம் 2:20 மணிக்கு டி.பி.சத்திரம் போலீசில் புகார் அளித்துள்ளார். டி.பி.சத்திரம் போலீசார், இருதரப்பினரையும் அழைத்து விசாரிக்கின்றனர். சம்பவம் தொடர்பாக, தாசில்தார் மற்றும் துணை தாசில்தார்கள், சென்னை கலெக்டர் அலுவலகத்தில் விளக்கம் அளித்தனர்.