காசிமேடு, ஆடி அமாவாசை எதிரொலியால், காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் வழக்கத்திற்கு மாறாக, மக்கள் கூட்டம் நேற்று குறைவாக இருந்தது.ஐம்பதுக்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில், 'வரி ஓரா, வெள்ள ஊடான், புள்ளி களவான், தக்காளி களவான், நவரை, கானாங்கத்த' உள்ளிட்ட மீன்களின் வரத்து அதிகளவில் இருந்தது.மக்கள் கூட்டம் குறைவாக இருந்ததால், மீன் விலையும் குறைந்து காணப்பட்டது. மேலும், ஏழுக்கும் மேற்பட்ட படகுகளில், படகிற்கு தலா 2 டன் முதல் 3 டன் என, 15 டன் வரை, 'கடல் கோழி' என அழைக்கப்படும் பேத்தை மீன் அதிகம் இருந்தன.பேத்தை மீன், மனிதர்களை போன்று பற்கள் உடையது; கோழி இறைச்சி சுவை உடையதால் கடல் கோழி என அழைக்கப்படுகிறது. கோழி மீன்கள் வரத்து அதிகரிப்பால், 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மீனவர் தினேஷ் என்பவர் படகில், கடல் கோழி மீன் 2 டன் அளவிற்கு கிடைத்தது. அவரது விசைப்படகில் இருந்த ஐஸ்கட்டிகள் காலியாகிவிட்டதால் விசைப்படகின் மேலே மீன்களை போட்டு, கரைக்கு கொண்டு வந்தார். பெரும்பாலான மீன்கள் கெட்டுப் போகும் நிலைமையில் இருந்ததால், விலை போகாது என, ஏலம் விடும் இடத்திலேயே மீன்கள் கொட்டினார். 'தேவைப்படுவோர் இலவசமாக எடுத்து செல்லுங்கள்' என்றார். இதையடுத்து, கருவாடிற்காக வியாபாரிகளும், பொதுமக்களும் மீன்களை இலவசமாக அள்ளி சென்றனர்.