| ADDED : மார் 25, 2024 12:50 AM
சென்னை:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த பின், வண்டலுார் - ஊரப்பாக்கம் இடையே, பயணியரின் வருகை பல மடங்கு அதிகரித்துள்ளதால், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், தாம்பரம் வரை இயக்கப்பட்ட மின்சார ரயில் சேவை, கூடுவாஞ்சேரி வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.இந்த இருமார்க்கத்திலும் இரவு 7:00 மணி முதல் 11:00 மணி வரை, தலா 10 மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.எனவே, இந்த ரயில்களை காலை நேரத்திலும் இயக்கினால், மிகவும் பயனுள்ளதாக இருக்கும், என பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து, சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:சென்னை கடற்கரை - செங்கல்பட்டு தடத்தில், தினமும் 2.50 லட்சம் பேர் பயணம் செய்து வருகின்றனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்புக்கு பின், பயணியரின் கூட்ட நெரிசலை கருத்தில் வைத்து, சென்னை கடற்கரை - கூடுவாஞ்சேரி வரை, இருமார்க்கத்திலும் தலா 10 மின்சார ரயில்கள் சர்வீஸ் இயக்கப்படுகிறது.இதனால், இந்த தடத்தில் வழக்கத்தைவிட தினமும் 15,000க்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர். இந்த மின்சார ரயில்களை காலையிலும் இயக்க வேண்டுமென, பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.