பனையூர், சோழிங்கநல்லுார் மண்டலம், 197வது வார்டு, கிழக்கு கடற்கரை சாலையில், உத்தண்டி முதல் கானத்துார் எல்லை வரை உள்ளது. இந்த பகுதியின் கிழக்கு திசையில் துவங்கும் ஒவ்வொரு தெருவும், கடற்கரையில் முடிகிறது.இதனால், இந்த தெருக்கள் வழியாக கடற்கரை செல்வோர் அதிகம். கடற்கரையில் ஆமைகள் வந்து, மணலில் முட்டையிட்டு செல்லும்.இந்த கடற்கரை பகுதியில் குப்பை, பிளாஸ்டிக், மரக்கழிவுகள், மது பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. மாநகராட்சியின் குப்பை மேலாண்மை கையாளும் 'உர்பேசர்' ஊழியர்கள், கடற்கரையை சுத்தம் செய்ய வேண்டும். ஆனால், வாகனங்கள் செல்லும் பிரதான சாலையில் மட்டும் குப்பையை சுத்தம் செய்துவிட்டு, கடற்கரை தெருக்கள் மற்றும் கடற்கரையில் குப்பை சேகரிப்பதில்லை. கடற்கரையில், 2 கி.மீ., நீளத்தில் குப்பை கழிவுகள் தேங்கி கிடப்பதாக, பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.இது குறித்து, பகுதிமக்கள் கூறியதாவது:துாய்மை பணியாளர்கள், வி.ஐ.பி.,க்கள் வசிக்கும் பகுதியில் காட்டும் முக்கியத்துவத்தை, கடற்கரைக்கு வழங்குவதில்லை. மண்டலத்தில் கேட்டால், ஊழியர்கள் பற்றாக்குறை என்கின்றனர். 'உர்பேசர்' அலுவலர்களிடம் கேட்டால், போதிய ஊழியர்கள் வழங்கியதாக கூறுகின்றனர். குப்பையால் கடல்வாழ் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். பொதுமக்களும் கடற்கரைக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, ஒதுங்கும் குப்பையை உடனுக்குடன் அகற்றும் வகையில் நடவடிக்கை எடுக்கு வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.