| ADDED : ஜூன் 09, 2024 01:21 AM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலி அடுத்த துஞ்சம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் யுவராஜ், 38. இவர், டைல்ஸ் ஒட்டும் பணி செய்து வருகிறார். இவரது மனைவி செல்வி, 30. இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று முன்தினம் இரவு யுவராஜ் தன் வீட்டின் முன் உள்ள வராண்டாவில் துாங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவு 11:30 மணிக்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு மர்ம நபர்கள், யுவராஜின் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில், கத்தியால் சரமாரியாக வெட்டி தப்பிச் சென்றனர்.இதில், சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். இது குறித்து செங்கல்பட்டு தாலுகா போலீசார் விசாரிக்கின்றனர்.இந்த நிலையில், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என, நெம்மேலி பேருந்து நிறுத்தம் அருகே, மாமல்லபுரம் -- செங்கல்பட்டு நெடுஞ்சாலையில், உறவினர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் நேறறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.போலீசார் அவர்களிடம் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை அடுத்து, கலைந்து சென்றனர்.