பம்மல், மண்ணிவாக்கம் அடுத்த ஆதனுாரில் துவங்கும் அடையாறு ஆறு, வரதராஜபுரம், அனகாபுத்துார், கவுல்பஜார் வழியாக சென்று, பட்டினம்பாக்கம் அருகே கடலில் கலக்கிறது.இந்த ஆற்றில், திருநீர்மலைக்கு முன் கழிவுநீர் கலக்கவில்லை. அதேநேரத்தில், திருநீர்மலைக்கு பின், கழிவுநீர், தோல் தொழிற்சாலைகளின் கழிவு, செப்டிக் டேங்க் கழிவு கலந்து, நாசமடைந்துவிட்டது.மற்றொருபுறம், இறைச்சி கழிவுகள், குப்பை, கட்டட கழிவுகள் ஆகியவற்றை, இரவு நேரத்தில் லோடு லோடாக எடுத்து வந்து, ஆற்றில் கொட்டுகின்றனர். பம்மல், அனகாபுத்துார் பகுதிகளில், இது போன்று அதிக அளவில் கழிவுகள் கொட்டப்படுகின்றன.இதனால் அடையாறு ஆறு, மேலும் நாசமடைந்து விட்டது. இதை தடுக்கும் வகையில், அடையாறு ஆற்றில், அனகாபுத்துார் ஆற்றுப்பாலம், சீனிவாசபுரம் ஆகிய இடங்களில், கண்காணிப்பு கேமராக்களை பொருத்த, தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.இரவு, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வாகனங்களில் கழிவுகளை எடுத்து வந்து கொட்டுவோரை கண்டறிந்து, அவர்கள் மீது அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என, மாநகராட்சியினர் தெரிவித்தனர்.