சென்னை:திருவல்லிக்கேணியைச் சேர்ந்தவர் சேகர், 24; ஆட்டோ ஓட்டுனர். இவர், டாக்டர் நடேசன் சாலை இ - -டிப்போ தெரு சந்திப்பு நிறுத்தத்தில் ஆட்டோவை நிறுத்துவது வழக்கம்.ஆட்டோ நிறுத்துவது தொடர்பாக, சேகருக்கும், திருவல்லிக்கேணியைச் சேர்ந்த குமரகுரு, 28, என்பவருக்கும் தகராறு இருந்தது.இந்த நிலையில், கடந்த 2021 செப்., 14ல், ஆட்டோவை ஸ்டாண்டில் நிறுத்திவிட்டு, வீட்டுக்கு செல்லும்போது, குமரகுரு திருவல்லிக்கேணியை சேர்ந்த சதீஷ், 26, உள்ளிட்டோர், சேகரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சேகர், மருத்துவமனையில் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக சேகர் அளித்த புகாரின்படி, குமரகுரு, சதீஷ், ஹரிஷ், அபிஷேக் ஆகியோர் மீது, கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஐஸ் ஹவுஸ் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.வழக்கு விசாரணை, மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'குமரகுரு, சதீஷ் மீதான குற்றச்சாட்டுகள் மட்டும் அரசு தரப்பால் சந்தேகக்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளன. எனவே, குமரகுருவுக்கு இரண்டு ஆண்டுகளும், சதீஷுக்கு ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 31,000 ரூபாயும் விதிக்கப்படுகிறது. அபராத தொகையில் 30,000 ரூபாயை பாதிக்கப்பட்ட சேகருக்கு வழங்க வேண்டும். ஹரிஷ், அபிஷேக் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாததால், அவர்களை வழக்கில் இருந்து விடுவித்து' தீர்ப்பளித்தார்.