சென்னை:பல்வேறு குளறுபடிகளுடன் இயங்கும் புழல் ஊராட்சி ஒன்றியத்தை, சென்னை மாநகராட்சியுடன் இணைக்க வேண்டும் என பொதுமக்கள் விரும்புகின்றனர்.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புழல் ஊராட்சி ஒன்றியம், சென்னை மாநகராட்சி எல்லையை ஒட்டி உள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில் வடகரை, அழிஞ்சிவாக்கம், கிராண்ட்லைன், புள்ளிலைன், விளாங்காடுபாக்கம், தீர்த்தகரையம்பட்டு, தீயம்பாக்கம், சென்றம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் இருந்தன. அ.தி.மு.க., ஆட்சியில் சென்னை எல்லை விரிவாக்கம் செய்யப்பட்ட போது, வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம் ஊராட்சிகள் அதில் இணைக்கப்பட்டன. மாதவரம் தாலுகா அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், மீதமுள்ள ஊராட்சிகள் இருந்தன. அதன்பின், பொன்னேரி தாலுகா அலுவலகத்தின் கட்டுப்பாட்டில், இந்த ஊராட்சிகள் இணைக்கப்பட்டன. ஜாதிசான்று, வருமானசான்று உள்ளிட்ட பல்வேறு சான்றுகளை பெறுவதற்கு, 20 கி.மீ., தொலைவில் உள்ள பொன்னேரி தாசில்தார் அலுவலகத்திற்கு, புழல் ஊராட்சி ஒன்றிய மக்கள் செல்ல வேண்டியுள்ளது.மாதவரம் தொகுதியில் இந்த ஊராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இந்த தொகுதியின் பெரும்பாலான பகுதிகள், சென்னை மாநகராட்சி எல்லையில் உள்ளன. மாதவரம் தொகுதியைச் சேர்ந்த மக்கள், பொன்னேரி தொகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், சென்னை மாநகராட்சி எல்லையில், புழல் மத்திய சிறைக்கு எதிரே இயங்கி வருகிறது. சமீபத்தில், பல்வேறு ஊராட்சி ஒன்றியங்களுக்கு புதிய அலுவலகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது. ஆனால், பழைய கட்டடத்தில் இயங்கும் புழல் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், கண்டுக்கொள்ளாமல் விடப்பட்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தில், நான்கு ஒன்றிய கவுன்சிலர் வார்டுகள் மட்டுமே உள்ளன. இதில் வெற்றி பெற்றுள்ள நான்கு பேரில் ஒருவர் ஒன்றிய பெருந்தலைவர் ஆகவும், மற்றொருவர் துணைத்தலைவராகவும் பணியாற்றி வருகின்றனர்.மீதமுள்ள இரண்டு கவுன்சிலர்களை வைத்து, மாதந்தோறும் கவுன்சில் கூட்டம் நடந்து வருகிறது. வடப்பெரும்பாக்கம் மற்றும் தீயம்பாக்கத்தில் சிறிய தொழிற்சாலைகள், வர்த்தக கடைகள் அதிகம் உள்ளன. இதனால் மாநகராட்சிக்கு அதிக வரிவருவாய் கிடைக்கும் என்பதால், இந்த ஊராட்சிகள் மட்டுமே சேர்க்கப்பட்டன. வருவாய் குறைந்த ஊராட்சிகள், அப்படியே விடப்பட்டன. இதனால், 10 ஆண்டுகால அ.தி.மு.க., ஆட்சியில் மட்டுமின்றி, தற்போதைய மூன்று ஆண்டுகால தி.மு.க., ஆட்சியிலும், புழல் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகள் வளர்ச்சியடையாமல் பின்னுக்கு சென்றுள்ளன. எனவே, இந்த ஊராட்சிகளை, சென்னையுடன் இணைக்க வேண்டும் என இங்கு வசிக்கும் மக்கள் விரும்புகின்றனர்.அடிப்படை வசதிகளும் கேள்விக்குறி
புள்ளிலைன் ஊராட்சி உட்பட ஏழு ஊராட்சியை சேர்ந்தவர்களும், பொன்னேரி தாலுகா அலுவலகத்தின் மூலம், பட்டா உள்ளிட்ட வருவாய்த் துறை தொடர்பான சான்றிதழ்கள் பெற முடிவதில்லை. சான்றிதழ் வாங்க, 20 கி.மீ., தூரத்தில் உள்ள பொன்னேரி தாலுகா அலுவலகத்திற்கு அலைய முடியாமல், பெண்கள், முதியோர் அவதிப்படுகின்றனர். அடிப்படை வசதிகளும் கேள்விக்குறியாக உள்ளது. இந்த ஏழு ஊராட்சிகளையும், சென்னை மாநகராட்சியுடன் இணைத்தால் நல்லது. அல்லது பொன்னேரி தாலுகாவை, இரண்டாக பிரித்து, சோழவரத்தில் தாலுகா அலுவலகம் அமைக்க வேண்டும்.-எல்.காமராஜ், 51; புள்ளிலைன் ஊராட்சி, செங்குன்றம்
'எந்த பணியும் நடக்கவில்லை'
திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எந்த பணிகளும் செயல்படுத்தப்படவில்லை என, விளாங்காடுபாக்கம் ஊராட்சியில் வசிப்போர் பெரும் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.இது குறித்து, இந்த ஊராட்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் மீரான் கூறியதாவது: புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஏழு ஊராட்சிகளில், 50 ஆயிரம் பேர் வசிக்கின்றனர் அவர்களில், 26 ஆயிரம் பேர் வாக்காளர்கள். அந்த ஊராட்சிகளை சேர்ந்தவர்கள் வருவாய்த்துறை மூலம் பெறும் பல்வேறு சான்றிதழுக்காக, பொன்னேரிக்கு அலைய வேண்டிய நிலை உள்ளது. பொன்னேரி வருவாய்த்துறையின் எல்லை, அதிக பரப்பளவைக் கொண்டுள்ளது. இதனால், இந்த ஊராட்சிகளில் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எந்தப் பணிகளும் நடப்பதில்லை.நீர்நிலை, அரசு புறம்போக்கு நிலங்களும், வருவாய்த்துறையால் முறையாக பராமரிக்கப்படுவதில்லை. இதனால், அரசு நீர்நிலைகளில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உருவாகி உள்ளன. ஆக்கிரமிப்புகள் குறித்த புகார் மீது விசாரணை கூட நடத்தப்படுவதில்லை.இவ்வாறு அவர் கூறினார்.