சென்னை, திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த, கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு, 5 வயதில் ஒரு மகன் உள்ளான். அப்பகுதியில், யு.கே.ஜி., படித்து வரும் சிறுவன், ஒரு மாதத்திற்கு முன், அதிகளவிலான இருமல், மூச்சு விடுவதில் சிரமம் போன்றவற்றால் அவதிப்பட்டு வந்தான்.இதற்காக, எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, சிறுவனின் நுரையீரல் பகுதியில், மர்ம பொருள் இருந்தது கண்டறியப்பட்டது.சிறுவனின் நுரையீரலில் இருந்து அதை அகற்ற, இரண்டு முறை, அறுவை சிகிச்சை அல்லாத, 'ப்ராங்கஸ்கோபி' சிகிச்சை முறை பயன்படுத்தப்பட்டுள்ளது.டாக்டர்களின் இம்முயற்சி தோல்வியடைந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில், ஏப்., 26ல் சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.அங்கு, குழந்தைகள் அறுவை சிகிச்சை மருத்துவ துறை தலைவர் மது, மயக்கவியல் துறை தலைவர் அருணா பரமேஸ்வரி அடங்கிய மருத்துவ குழுவினர், அதே 'ப்ராங்கஸ்கோபி' அறுவை சிகிச்சை முறையில், சிறுவனின் நுரையீரல் பகுதியில் இருந்த மர்ம பொருளை அகற்றினர். அது, எல்.இ.டி., பல்ப் என்பது தெரியவந்து உள்ளது.இதுகுறித்து, டாக்டர் மது கூறியதாவது:குழந்தைகளை பொறுத்தவரை, மூச்சுக்குழாய் மற்றும் உணவு குழாய் ஆகிய இரண்டும், அருகருகே தான் இருக்கும். அதனால், குழந்தைகள் விழுங்கும் பெரும்பாலான பொருட்கள், வயிற்றுக்கு செல்வதை விட, நுரையீரல் பகுதிக்கு சென்றுவிடும்.அவ்வாறாக தான், சிறுவன் விழுங்கிய 3.20 செ.மீ., அளவுடைய பல்ப், நுரையீரல் பகுதியில் சென்று, மூச்சுத்திணறலை ஏற்படுத்தியுள்ளது. ராமசந்திரா மருத்துவமனையில் உள்ள நவீன ப்ராங்கஸ்கோபி கருவி வாயிலாக, சிறுவனின் வயிற்றில் இருந்த பல்ப் அகற்றப்பட்டுள்ளது.இச்சிகிச்சை முறையில், சிறுவனுக்கு தீவிர சிகிச்சை பிரிவும், செயற்கை சுவாசமும் தேவைபடவில்லை. தற்போது சிறுவன், நலம் பெற்று வீடு திரும்பிஉள்ளான்.இவ்வாறு அவர் கூறினார்.